சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, சுமார் 30 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். தனது மகனை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத் நன்நடத்தைக் காரணமாக முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை தங்களுக்கு வழங்குமாறு பேரறிவாளன் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அவரது தாய் அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, மே 28-ம் தேதி பேரறிவாளன் ஜோலால்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்றார். அங்கிருந்து அவர் சிறுநீரக தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து நான்கு மற்றும் ஐந்தாவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது 150 நாட்கள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும் அவருக்கு சிகிச்சை தொடர்வதால் பரோல் நீட்டிப்பு கோரப்பட்டது. ஐந்தாவது முறை வழங்கப்பட்ட பரோல் இன்று முடிவடைந்த நிலையில், அவரை சென்னை புழல் சிறைக்கு அழைத்துச்செல்ல ஆம்பூர் சப் டிவிஷன் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன், வேலூர் ஏ.எல்ஜி.எஸ்.சி துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன். வாணியம்பாடி போக்குவரத்து ஆய்வாளர் கமலக்கண்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால் ஆறாவது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு தொடர்ந்து நடந்து வருவதால், அவரது வீட்டின் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்டக் காவல்துறையினர் செய்து தர வேண்டும் என பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரறிவாளனின் உடல்நிலையைக் கருதி மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.
0
0