தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு வெளியீடு தேதியில் மாற்றம் : தேர்தல் அதிகாரி அறிவிப்பு
17 November 2020, 4:21 pmசென்னை : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிவு 23ம் தேதி வெளியாகும் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் விஷால் அணியினரின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தனி அதிகாரியின் கண்காணிப்பில் தேர்தலை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும், புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஜுன் 21-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தனி அதிகாரியின் மூலம் தேர்தல் நடத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை வரும் செப்., 30-ம் தேதிக்குள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தேர்தல் நடத்தி முடித்தது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு ஆணையிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் நவம்பர் 22ம் தேதி நடைபெறும் என தேர்தலை நடத்தும் அதிகாரி ஜெயச்சந்திரன் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவை, தேர்தல் நடக்கும் மறு தினத்தில் வெளியிடப் போவதாக தேர்தல் அதிகாரி ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். அதாவது, வரும் 22ம் தேதிக்கு பதில் 23ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.