கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வெள்ளி விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர்
Author: kavin kumar29 September 2021, 7:10 pm
கோவை: கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வெள்ளி விழா மலரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
கோவை ஆடிஸ் வீதியில் செயல்பட்டு வரும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடந்த 1996 ஆம் ஆண்டு அப்போதைய மூத்த பத்திரிகையாளர்களால் தொடங்கப்பட்டது. நூற்றுக்கும் அதிகமான பத்திரிகையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கோவையில் அண்மையில் நடைபெற்றன. வெள்ளி விழாவையொட்டி பத்திரிகையாளர்களின் புகைப்படக் கண்காட்சி மற்றும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய எழுத்தாளர்களின் கட்டுரைகள் அடங்கிய, கோவையின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் வகையிலான வெள்ளி விழா மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மலரின் முகப்பு அட்டையை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கோவையில் கடந்த சனிக்கிழமை வெளியிட்டு மூத்த இதழியலாளர்களுக்கும் அமைச்சர் ராமச்சந்திரன் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார்.வெள்ளி விழாவின் முத்தாய்ப்பாக வெள்ளி விழா மலரின் வெளியீட்டு விழா தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. வெள்ளி விழா மலரில் மூத்த எழுத்தாளர்களின் கட்டுரைகள் கோவையின் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளதை அறிந்து தமிழக முதலமைச்சர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளி விழா மலரை வெளியிட்டுச் சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் பேச்சிகுமார், செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
0
0