பாஸ்மார்க் வாங்கிய டாஸ்மாக் : கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யாத ஒரே ஒரு கடை.. மதுப்பிரியர்கள் வரவேற்பு!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2021, 1:57 pm
Tasmac - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : “மதுபானத்திற்கு ரசீது மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதில்லை“ என கடையை சுற்றி விளம்பரம் செய்த டாஸ்மாக் கடைக்கு மதுப்பிரியர்கள் குவிந்து வரும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுப்பிரியர்கள் தட்டி கேட்டு விற்பனையாளர்களுடன் தகராறில் ஈடுபடுவதும் விற்பனையாளர்களோ சற்றும் சளைக்காமல் கராராக கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் குடிமகன்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் விற்பனையாளர்களிடம் வாக்குவாதம் செய்து அதை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு குமுறும் நிலையில் விற்பனையாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதும் சமீப காலமாக நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் அரசு அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் ஒவ்வொரு கடையிலும் விற்பனை செய்யும் மதுபானங்கள் அதன் விலை பட்டியல் ஆகியவற்றை கடை முன் வைக்க வேண்டும்.

விற்பனையாகும் மதுபானத்திற்கு ரசீது வழங்க வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த சுற்றறிக்கையை துளி கூட மதிக்காத கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் வழக்கமான நடைமுறையை பின்பற்றி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு விதி விலக்காக கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே முட்டைக்காடு வனப்பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் இயங்கி வரும் “டாஸ்மாக்” கடையில் பணியாற்றும் மேற்பார்வையாளர் சேவியர் கடையை சுற்றி வாடிக்கையாளர் வாங்குகின்ற மதுபானத்திற்கு ஏற்ப ரசீது, இந்த கடையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதில்லை, விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் தெரிவிக்க வேண்டிய மேற்பார்வையாளர் எண் என கடை சுற்றி எங்கு பார்த்தாலும் விளம்பர பதாகைகளை வைத்து விளம்பர செய்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைதளங்கள் மூலம் காட்டு தீ போல குடிமகன்களுக்கு பரவிய நிலையில் இன்ப அதிர்ச்சியடைந்த குமராபுரம், முட்டைக்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் அந்த கடைக்கு சென்று மது வாங்க ஆர்வம் காட்டியதால் இந்த கடை ஒரே நாளில் பிரபலமாகி குடிமகன்களிடையே பேச்சுப்பொருளாகியுள்ளது.

இதுகுறித்து அந்த கடை மேற்பார்வையாளர் சேவியர் தெரிவிக்கையில் தமிழ்நாடு முழுவதும் மதுபானங்கள் 5-ரூ 10-ரூ கூடுதலாக விற்பனை செய்வதாக பிரச்சனை இருந்து வருவதாகவும் நான் எனது சொந்த முயற்சியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்று இந்த விளம்பரத்தை செய்ததாகவும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்கமாட்டோம் என்று இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசு ஊழியருக்கு இணையான ஊதியத்தை தரவேண்டும் என்றும் கோரிக்கை வைக்க இந்த விளம்பரத்தை யுக்தியாக பயன்படுத்துவதாகவும் கூறினார்.

ஆனால் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியான முட்டைக்காடு வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையில் விற்பனை மிகவும் மந்தமாக இருந்த நிலையில் விற்பனையை அதிகரிக்கவே இதுபோன்ற யுக்தியை மேற்பார்வையாளர் கையாண்டுள்ளதாக மற்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விற்பனை யுக்தியோ இல்லை சம்பள உயர்வு கோரிக்கையோ எதுவாக இருந்தாலும் கூடுதல் விலை கொடுக்காமல் உரிய விலைக்கு மதுபானம் கிடைப்பதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Views: - 803

0

0