கூடாரம் அமைத்து கும்மாளம் போட்ட சுற்றுலா பயணிகள் : தட்டிக் கேட்ட உள்ளூர் வாசிகள் மீது தாக்குதல்.. வைரலாகும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2021, 1:29 pm
Kodaikanal Clash- Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் டென்ட் கூடாரங்கள் அமைத்து தங்க எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் பொதுமக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் கைகலப்பு ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வளையதளத்தில் பரவி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலைப்பகுதி முழுவதிலும் டென்ட் கூடாரங்கள் அமைத்து தங்க கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த வாரம் மேல்மலை கிராமமான கூக்கால் பகுதியில் டென்ட் கூடாரம் அமைத்து தங்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து வட்டக்கானல் பகுதியில் டென்ட் கூடாரம் அமைத்து தங்கியதை தொடர்ந்து கூடாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் நிலத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

கொடைக்கானல் வருவாய் கோட்டாசியர் டென்ட் கூடாரங்கள் அமைத்து தங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் அட்டுவம்பட்டி பகுதியில் டென்ட் கூடாரங்கள் அமைத்து சுற்றுலாப்பயணிகள் தங்கி உள்ளனர்.

கூடாரம் அமைத்து தங்கிய சுற்றுலாப்பயணிகள் CAMP FIRE அமைத்து கூச்சலிட்டு ஆடல் பாடல் என கும்மாளம் போட்டுள்ளனர். இதனால் குடியிருப்பு பகுதியில் இருந்தவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சுற்றுலாபயணிகளிடம் அப்பகுதி மக்கள் கூச்சல் போடுவதை தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் உள்ளூர் மக்களுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

தற்போது இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளங்களில் வெகுவாக பரவிவருகிறது. தொடர்ந்து டென்ட் கூடாரம் அமைத்தது தங்குவோர் மீதும் அதனை ஏற்பாடு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 385

0

1