மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளருக்கு பொறி வைத்த ஐ.டி. அதிகாரிகள்..! கட்டு கட்டாக பணம்… கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்..!

By: Babu
15 October 2020, 4:37 pm
Vellore - IT 1- updatenews360
Quick Share

வேலூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான கணக்கில் வராத பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம், வேலூர் காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் வேலூர் மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இதில் இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றுபவர் பன்னீர்செல்வம் (51). வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது, நிர்வாக பொறியாளராக பணியாற்றி வந்தார். பின்னர், பதவி உயர்வு பெற்று வேலூர் மண்டல அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டார்.

தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் சான்று வழங்க, நிறுவனங்களுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட பணத்தை நிர்ணயம் செய்து வாங்கிக் கொண்டுதான், சான்றுகளை வழங்கி வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டு வந்தது. அதேபோல, புகாருக்குள்ளாகும் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு, பேரம் பேசி முடித்து வைப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. மேலும், புதிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கான தடையில்லா சான்று, ஓட்டல்கள் உள்ளிட்டவைகளுக்கும் தடையில்லா சான்று வழங்க குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் முதல் ஒரு கோடி வரையில் லஞ்சம் பெறுவது இவரது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

இப்படி, அடுக்கடுக்கான புகார்கள் வந்து குவிந்த நிலையில், வேலூர் லஞ்ச ஒழிப்புதுறை காவல்துறை டி.எஸ்.பி. ஹேமசித்ரா தலைமையில் ஆய்வாளர்கள் ரஜினி, விஜய், விஜயலட்சுமி ஆகியோர்கள் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது காரை கண்காணித்து பின் தொடர்ந்து சென்றனர். அவரது தற்காலிக அலுவலகத்திற்கு சென்றவுடன், அங்கு முதலில் பன்னீர்செல்வத்தின் காரில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், அவரது தற்காலிக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.31. 23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.33. 73 லட்சம் கணக்கில் வராத பணத்தை இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் மீது துறைரீதியான விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவருக்கு சொந்தமான ராணிப்பேட்டை பாரதி நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, சுமார் ரூ.2 கோடி ரொக்கப் பணம், 4 கிலோ தங்க நகைகள், பத்தரை கிலோ வெள்ளி பொருட்கள் பட்டுப் புடவைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் போன்றவைகள் சிக்கியுள்ளது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை குறித்த தகவலறிந்து விட்டதால், அவரது வீட்டில் இருந்த பணம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், எஞ்சிய பணம் மட்டுமே கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 46

0

0