கோவையில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்ட விவகாரம்: சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை நெருங்கும் போலீசார்..!!

Author: Aarthi Sivakumar
10 January 2022, 4:58 pm
Quick Share

கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவிய மர்ம நபர்கள் குறித்து சிசிடிவி காட்சி உதவிகளுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையம் பகுதியில் பெரியார், அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் உள்ளன. அப்பகுதியில் திராவிடர் கழகத்தினர் நடத்தி வரும் பகுத்தறிவு படிப்பகம் முன்பாக பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலையை அவமரியாதை செய்துள்ளனர். பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தும், காவி பொடி தூவியும் அவமரியாதை செய்த பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து அப்பகுதி திராவிடர் கழகத்தினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து பெரியார் சிலை முன்பு திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்துத்துவா அமைப்பினர் பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்து இருப்பதாகவும், அவர்கள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் திராவிடர் கழகத்தினர் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போத்தனூர் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 217

0

0