திருட்டுப்போன 18 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு…

9 August 2020, 6:17 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் திருட்டுப்போன 18 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்பி துரை ஒப்படைத்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் பொது மக்களின் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக கடந்த 2019 ஆம் வருடம் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. இதனை விசாரணை செய்வதற்காக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து செல்போன் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் 20 லட்சம் மதிப்புள்ள 154 செல்போன்கள் மீட்கப்பட்டு செல்போன் உரிமையாளர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் துரை ஒப்படைத்தார்.

இதேபோன்று 2020ஆம் ஆண்டில் காணாமல் போன 18 லட்சம் மதிப்புள்ள 111 செல்போன்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன்களையும் சம்பந்தப்பட்ட செல்போன் உரிமையாளர்களை அழைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செல்போன்களை எஸ்பி ஒப்படைத்தார். பின்னர் இதுகுறித்து எஸ்பி துரை பேசுகையில், திருவாரூர் மாவட்டத்தில் சைபர் செல் பிரிவு நவீன மயமாக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.

சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு துரித நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருவதாகவும், குற்றங்களை தடுக்க பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அனைவரின் முகநூல் வாட்ஸ் அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் இதர செயலிகள் அனைத்தும் திருவாரூர் மாவட்ட சைபர் செல் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும், சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை எச்சரித்துள்ளார்.