கிராமபுறங்களில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

4 July 2021, 6:29 pm
Quick Share

அரியலூர்: கிராமபுறங்களில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கஞ்சா தடுப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையொட்டி அரியலூர் டிஎஸ்பி மதன் தலைமையில் கஞ்சா தடுப்பு தனிப்பிரிவு போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வங்காரம் பகுதியில் கஞ்சா இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார் கஞ்சா வேண்டும் என்று வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்( 27) என்பவரை தொடர்பு கொண்டனர். அவரிடம் 500 ரூபாய் பணம் கொடுத்து கஞ்சாவை போலீசார் வாங்கினர்.

பின்னர் கையும் களவுமாக பிரகாஷை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை செய்ததில், சித்துடையார் காலனி தெருவைச் சேர்ந்த பால்ராஜ்( 48 ) என்பவர் தன்னிடம் கஞ்சா பொட்டலங்களை கொண்டு வந்து கொடுத்து விற்பனை செய்ய சொல்வதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பால்ராஜை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், சென்னையிலிருந்து கஞ்சா பொட்டலங்களை கொண்டு வந்து இந்த பகுதியில் உள்ள நண்பர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மூலம் விற்பனை செய்வதாக தெரிவித்தார். அதைனைத் தொடர்ந்து போலீசார் சோதனை செய்ததில்,

சித்துடையார் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி கஞ்சா வியாபாரி பால்ராஜ் மற்றும் விற்பனையாளர் பிரகாஷ் ஆகியோரை கைது செய்து செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகர் பகுதியில் மட்டுமே கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக இருந்த நிலையில், கிராம பகுதிகளிலும் தற்போது கஞ்சா விற்பனை நடைபெறுவது பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 122

0

0