கஞ்சா வியாபாரிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை: 5 கஞ்சா வியாபாரிகள் கைது

17 July 2021, 7:31 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கஞ்சா வியாபாரிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் கஞ்சா விற்பனை செய்து வந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டு ஆற்றில் பள்ளம் தோண்டிப் புதைக்கப்பட்டார்.

காஞ்சிபுரம் தாயார் குளம் குரு கோவில் அருகே ஏழுமலை கோவிந்தம்மாள் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 26 வயதுடைய மகன் ஐயப்பன், 24 வயதுடைய மகள் (திருநங்கை) ஆகியோர் உள்ளனர். சமீப காலமாக அய்யப்பன் கஞ்சா போதைக்கு அடிமையாகி கஞ்சா விற்பனை செய்து வருகிறார். அவ்வப்போது கஞ்சா விற்பனை செய்வதில் தகராறு ஏற்படுவது உண்டு. இந்நிலையில் கடந்த 26.06.2021 அன்று நண்பர்களை சந்தித்து விட்டு வருகிறேன் என கூறி வீட்டை விட்டு சென்றவர் திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர்கள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் 28.06.2021 அன்று புகார் அளித்தனர்.

ஐயப்பன் காணவில்லை என வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்களின் உத்தரவின்படி உதவி காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த ஆணை என்ற ஆனந்தன் முன் விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து ஐயப்பனை படுகொலை செய்து பிச்சவாடி கிராமத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் ஆற்றில் பள்ளம் தோண்டி புதைத்துள்ளது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி முருகன் தலைமையில், சிவகாஞ்சி பொறுப்பு காவல் ஆய்வாளர் சுந்தராஜ் ஆகியோர் ஆனந்தனை அழைத்துக்கொண்டு பிச்சுவாடி கிராமத்திற்கு சென்று சடலம் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்தனர்.

நாளை காலை கோட்டாட்சியர் முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுத்து மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்ய இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஐயப்பன் கொலை வழக்கில் ஆணை என்கின்ற ஆனந்தனையும் அவனுடைய கூட்டாளிகளான முசரவாக்கம் பகுதியை சேர்ந்த சோமா என்கின்ற செல்வம், முருகன், குள்ளி சுரேஷ் ,அபி என்கின்ற குணா ஆகிய ஐந்து பேர்களையும் எஸ்பி தலைமையிலான தனிப்படை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றார்கள். ஏற்கனவே ஆனந்தனை அரவிந்தன் மற்றும் ஹரி பாபு ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு ஐயப்பன் தான் காரணம் என்பதால் ஐயப்பனை தீர்த்துக்கட்ட ஆனந்தனின் கூட்டாளிகள் முடிவு செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் அனைவருமே பல குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் இவர்களின் பிரதான தொழில் கஞ்சா விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்கள் அனைத்து வழக்குகளிலும் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றார். அவர் தலைமையின் கீழ் பணிபுரியும் தனிப்பிரிவு காவலர்கள் சரியான தகவலை அளிப்பதில்லை என பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

Views: - 106

0

0