கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவர் மரணம்: உடலை கைப்பற்றி விசாரணை
Author: kavin kumar28 August 2021, 6:31 pm
திருச்சி: கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவர் உயிரிழந்ததையடுத்து,உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நரியப்பட்டி அடுத்துள்ள நீர்பழனி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் வேல்முருகன். இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் பணி நிமித்தமாக வேல்முருகன் மலேசியத் தலைநகரான கோலாலம்பூருக்கு சென்றார். அங்கு ரவி என்பவருக்கு சொந்தமான சலுான் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடையின் உரிமையாளர் ரவி இறந்த பின்னர் தொடர்ந்து அவரது மகன் மணிராஜ், கடையை நிர்வகித்து வந்த நிலையில் ஒப்பந்த காலம் முடிந்து ஊர் திரும்ப வேல்முருகன் முற்பட்ட போது கடையில் பணியாட்கள் இல்லாததால் தொடர்ந்து பணி செய்ய வற்புறுத்தப்பட்டு உள்ளார்.
கடையில் பணியாட்கள் பற்றாக்குறையால் மணிராஜ் வேல்முருகனை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்ப விரும்பாமல் தொடர்ந்து பணியாற்ற வலியுறுத்தி வந்தார். இது குறித்து புதுக்கோட்டையில் உள்ள தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் தொிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வேல்முருகன் திரும்பி வருவதற்கான விமான டிக்கெட்டிற்கான தொகையை இங்கிருந்தே கட்டினர். பின்னர் வேல்முருகன் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு திரும்பினார். அப்போது திடீரென நடுவானில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு
மயங்கி விழுந்தார். விமானம் திருச்சி வந்தவுடன் விமான நிலைய மருத்துவ அதிகாரிகள் வேல்முருகனை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதை அறிந்தனர்.
தொடர்ந்து விமான நிலைய காவல்துறையினர் இறந்த வேல்முருகனின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து காவல்துறையினர் புதுக்கோட்டையில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.
0
0