கொரோனா அச்சத்தால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா…

2 August 2020, 1:17 pm
Quick Share

திருவாரூர்: கொரோனா அச்சத்தால் திருவாரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை ஒரு சில பெண்கள் மட்டும் ஆற்றின் கரையில் பழங்கள் படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18ஆம் தேதி காவிரி தாயை போற்றும் வகையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். ஆடிப்பெருக்கு என்பது இந்துக்களின் சிறப்பு வழிபாட்டு நாளாகும். பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வணங்கி வழிபாடு நடத்தி தங்கள் கை மற்றும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மகிழ்வர். மேலும் விவசாயிகளும் இந்த நாளில் வழிபாடு நடத்தி சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்வர். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கடைமடை மாவட்டங்களான திருவாரூர் நாகை மாவட்டங்களுக்கு ஆடிப்பெருக்கு வழிபாட்டிற்கு தண்ணீர் வந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் கொரோனா முழு பொது முடக்கம் இன்று கடைப்பிடிக்கப்படுவது அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. இதன் காரணமாக மாங்குடியில் ஓடும் பாண்டவைமாற்றில் காவிரி தாய்க்கு அரிசி வெல்லம் பழவகைகள் ஆகியவற்றை வைத்து சில பெண்கள் மட்டுமே சிறப்பு வழிபாடு நடத்தினர். வழக்கமாக கடந்த ஆண்டுகளில் இந்த இடத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களது குடும்பத்துடன் வந்து வழிபாடு நடத்துவது குறிப்பிடத்தக்கது. கொரோனா அச்சம் காரணமாக மாவட்டம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.

Views: - 0

0

0