நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டை தட்டிக் கேட்ட அலுவலரை பணியிடமாற்றம்: யூனியன் கூட்டத்தில் கண்டன குரல் எழுப்பிய அதிமுக கவுன்சிலர்கள்…

9 July 2021, 4:33 pm
Quick Share

விருதுநகர்: நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டை தட்டிக் கேட்ட அலுவலரை பணியிடமாற்றம் செய்ததை யூனியன் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் கண்டன குரல் எழுப்பினர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் யூனியன் சேர்மன் தலைமையிலான ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சாத்தூர் யூனியன் சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ் தலைமை தாங்கினார் சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி மற்றும் போத்திராஜ் முன்னிலை வகித்தனர் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் டேவிட் மன்ற பொருள் வாசித்தார் சாத்தூரில் உள்ள 16 ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய ஏழாவது வார்டு கவுன்சிலர் கவிதா கருப்பசாமி, நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேட்டை தட்டிக் கேட்ட அலுவலரை பணியிடமாற்றம் செய்ததைக் கண்டித்தும், நேர்மையாக வேலைபார்க்கும் அரசு அதிகாரிகளை தேவையில்லாமல் இடமாற்றம் செய்து வருவதாக குற்றம் கூறி வெளிநடப்பு செய்தார்.

9வது வார்டு கவுன்சிலர் மாரியம்மாள் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடாக ஒரு சிலர் ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை பார்ப்பதாகவும், அதனை முறையாக ஆய்வு செய்து சரிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 14வது வார்டு கவுன்சிலர் வேலுச்சாமி கிராமங்கள் தோறும் முறையாக நூலகங்கள் அமைக்கப்படவில்லை என்றும், அவ்வாறு கட்டிய நூலகங்கள் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடப்பதாகவும், வராத செய்தித்தாள்களுக்கு கணக்கு எழுதி பில் எடுத்தப்படுவதாகவும், மேலும் சுகாதார வளாகங்கள் முறையாக செயல்பாடின்றி பழுதடைந்து கிடப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதனை சீரமைத்து நடைமுறைக்குக் கொண்டுவரும் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

Views: - 124

0

0