ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலம் நாள் ஒன்றுக்கு 67 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு: ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிகாரிகள் முடிவு

Author: kavin kumar
11 August 2021, 5:57 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலம் நாள் ஒன்றுக்கு 67 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் தலைமையில் நடந்த ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி தர்மபுரி ஒருங்கிணைந்த இரு மாவட்டங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2009 ஆண்டு திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. திட்டப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக அதிமுக அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றி கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக இத்திட்டதை திறந்து வைத்தார். அதன்மூலம் கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 30 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் பெருவாரியான கிராமங்களுக்கு நகரப் பகுதிகளுக்கு குடிநீர் செல்லாமல் இருந்தது.

இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர் என்பது பொதுமக்களுக்கு கேள்விக்குறியாகி இருந்து வந்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் ஒகேனக்கல் கூட்டு திட்டம் மீண்டும் முழுமையாக செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் தலைமையில் பர்கூர் தொகுதிக்குட்பட்ட 38 ஊராட்சி மன்ற தலைவர்கள் இரண்டு பேரூராட்சி தலைவர்கள் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று பருகூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினம்தோறும் கிராமங்களுக்கு குடிநீர் வருகிறதா? தண்ணீர் வருவதில் சிரமங்கள் எங்கு உள்ளது. எங்கெல்லாம் தண்ணீரை பம்ப் செய்யும் மோட்டார்கள் தேவை. நாள்தோறும் தற்போது எத்தனை லட்சம் குடிநீர் வருகிறது. அவற்றை எப்படி பொதுமக்களுக்கு வினியோகம் செய்கிறோம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய ஊராட்சி மன்ற தலைவர்கள் நாள்தோறும் முறையாக குடிநீர் வருவதில்லை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் பல கிராமங்களுக்கு இன்னும் இணைப்புகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

குடிநீர் குறைவாக வருவதால் எங்களால் நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்ய முடிவதில்லை என மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் தெரிவித்தனர். பர்கூர் தொகுதிக்கு வரும் தண்ணீரில் வழிநெடுகிலும் குழாய்கள் சேதம் மின்மோட்டார்கள் பழுது போன்ற காரணங்களால் நாள்தோறும் தண்ணீர் அனுப்புவதில் சிரமம் இருப்பதாகவும் தற்போது அவற்றை நிவர்த்தி செய்து வருவதாகவும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் பருகூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு நாள்தோறும் 67 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பது திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக அதில் பாதியாக அதாவது 30 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டும் விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது.

அடுத்து 20 நாட்களுக்குள் பர்கூர் தொகுதி முழுவதும் நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும் குழாய்கள் சேதம் மோட்டார்கள் பழுது ஆகியவற்றை நீக்கி பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் செயல்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஊராட்சி மன்ற தலைவர்கள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் தங்கள் கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நாள்தோறும் எத்தனை லட்சம் லிட்டர் தண்ணீர் வருகிறது என்பதை கண்காணிக்க வேண்டும் அதற்காக மீட்டர் பொருத்தவும் உத்தரவிட்டார்.

Views: - 199

0

0