நிலவு மற்றும் மின்னொளியில் மிதந்த தெப்பம் – கண்கொள்ளாத மதுரை தெப்பத்திருவிழா

28 January 2021, 9:20 pm
Quick Share

மதுரை: மதுரை தெப்பத் திருவிழாவில் நிலவு ஒளியிலும் மின்னொளியிலும் மிதந்த தெப்பத்திலிருந்து அன்னை மீனாட்சியும் ஆலவாய்ச் சொக்கர் பக்தர்களுக்கு அருள் தந்த திருக்காட்சி.

தைப்பூசத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் உற்சவ திருவிழாவான இன்று மீனாட்சியும் சொக்கரும் பிரியாவிடை யோடு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு இன்று அருட்காட்சி வழங்கினர். இன்று காலை 11 மணியளவில், முதல் சுற்றாக தெப்பத்தில் வலம் வந்த திரு சப்பரம், சற்றேறக்குறைய 12 மணி அளவில் மரகதவல்லி முக்தீஸ்வரர் ஆலயத்தின் எதிரே நிலைக்கு வந்தது. அதேபோன்று பிற்பகலிலும் சப்பரத்தில் மீனாட்சியும் சொக்கரும் பிரியாவிடையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.

மதுரை தெப்பத் திருவிழாவை பொருத்தவரை இரவில்தான் மின்னொளியில் மட்டுமன்றி பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் தெப்பத்தை சுற்றி விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிவெள்ளத்தில் சப்பரம் வலம் வரும் காட்சியை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கண்டு மகிழ்வது வழக்கம். அதேபோன்று இன்றும் மூன்றாவது சுற்றாக இரவு 8 மணி அளவில் ஒளி வெள்ளத்துடன் தெப்பத்தில் வலம் வந்த சப்பரம் இரவு 9 மணி அளவில் மீண்டும் நிலைக்கு வந்தது. பக்தர்கள் அனைவரும் இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு அம்மன் மற்றும் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Views: - 0

0

0