மாநில தேர்தல் ஆணையர் மீது வன்கொடுமை கீழ் வழக்கு பதிவு: அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்

Author: kavin kumar
9 October 2021, 4:57 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்காமல் சர்வாதிகார முறையில் செயல்படும் மாநில தேர்தல் ஆணையர் மீது வன்கொடுமை கீழ் வழக்கு பதிவு செய்து அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கிழக்கு மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சிதேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையரின் செயல்பாடுகள் சர்வாதிகார முறையிலும், தான் தோன்றித்தனமாக உள்ளதாகவும்,
நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் புதுச்சேரி அரசிடம் எவ்வித ஆலோசனையும் பெறாமல் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதத்தில் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்றார். மேலும் நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகள் சுழற்சி முறையில் நடத்த வேண்டும் என்ற உள்ளாட்சி சட்ட விதிகளுக்கு புறம்பாக தேர்தல் ஆணையம் 2006 தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்டது போன்று இப்போதும் ஒதுக்கீடு செய்யப்பட்டது சட்டவிதி மீறல் என்றும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் அவர்களுக்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளது எனவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மாநில தேர்தல் ஆணையர் செயல்பட்டுள்ளார் எனவே அவர் மீது துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அன்பழகன், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைத்த மாநில தேர்தல் ஆணையர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Views: - 205

0

0