விஷவாயு தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் கோரிய வழக்கு: சட்டப்படி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவு…

5 September 2020, 3:16 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: கோச்சடையில் உள்ள குடியிருப்பில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி செப்டிக் டேங்க் கிளீனிங் பணியில் ஈடுபட்டிருந்த சோலைநாதன் விஷ வாயு தாக்கி உயிரிழந்த வழக்கில் உரிய இழப்பீடு வழங்க கோரிய மனு மீதான விசாரணையில், மதுரை மாவட்ட ஆட்சியர் மறுவை பரிசீலனை செய்து சட்டப்படி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த 2016 ஆம் ஆண்டு சோலைநாதன் என்பவருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. நாங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்த அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். நான் 3 மாத கர்ப்பமாக இருந்தேன். எனது கணவர் பல்வேறு தூய்மை பணிகளை மேற்கொண்டு வந்தார். 6.08. 2016. ஆண்டு காலை 9:30 மணிக்கு கோச்சடையில் உள்ள சாந்தி சதன் குடியிருப்பில், அங்குள்ள சங்க நிர்வாகி என் கணவருக்கு போன் செய்து செப்டிக் டேங்க் கிளீனிங் பணிக்கு அழைத்துச்சென்றார்.

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வில்லை. செப்டிக்டேங்க் கிளினிங் பணி மேற்கொண்டிருந்த போது எனது கணவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் , கையால் மலம் அள்ளும் அவலத்திற்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து எனக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுபடி, எனது வாழ்வாதாரத்திற்கான அரசு வேலையோ,

எந்தவிதமான உதவிகளும் வழங்கப்பட வில்லை. எனவே கையால் மலம் அள்ளும் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் மறுவாழ்வு வழங்க உத்தரவிட வேண்டும் . மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி , மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து சட்டப்படி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Views: - 0

0

0