6 புதிய மாவட்டங்கள் தென் தமிழகத்தில் கொண்டுவந்த சரித்திரம் படைத்த முதல்வர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி…
19 August 2020, 10:47 pmமதுரை: ஒரே மாவட்டத்தில் 6 புதிய மாவட்டங்கள் தென் தமிழகத்தில் கொண்டுவந்த சரித்திரத்தை தமிழக முதல்வர் படைத்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நில அளவையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆப்ரிக்க நாடுகளில் உருவாகும் பாலைவன வெட்டுக்கிளிகளாக இருக்கும் என உசிலம்பட்டி விவசாயிகள் அச்சமடைந்தனர். ஆனால் அவை நாட்டு வெட்டுக்கிளிகள் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆபத்தை விளைவிக்க கூடிய வெட்டுக்கிளிகள் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும் துறை அமைச்சர் என்ற முறையில் மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் முன் வைத்துள்ளேன். தூத்துக்குடியில் காவலர் சுப்ரமணியன் கொலை செய்யப்பட்ட சம்பவம் துரதிஷ்டவசமானது. எல்லையில் நாட்டை பாதுகாக்கும் வீரர்கள் போல மக்களை காக்கும் பணியில் இரவு பகலாக உயிரை பணயம் வைத்து காவலர்கள் பணியாற்றுகிறார்கள். காவலர் சுப்ரமணியனின் பணி அளப்பரியது அவரின் செயலை பாராட்டுகிறோம். சுப்பிரமணியனின் பணி காவல்துறையில் முன்மாதிரியாக பார்க்கப்பட வேண்டியது.
தனது உயிரை துச்சமென கருதி குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதற்காக காவலர் சுப்ரமணியன் போராடியுள்ளார். பொதுமக்கள் அத்தியாவசியமுள்ள தேவைக்கு மட்டும் இ பாஸ் விண்ணப்பிக்க வேண்டும். இ-பாஸ் முறையில் கொண்டுவர்ப்பட்டுள்ள எளிமையான முறையால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர் . ஒரே மாவட்டத்தில் 6 புதிய மாவட்டங்கள் தென் தமிழகத்தில் கொண்டுவந்த சரித்திரத்தை தமிழக முதல்வர் படைத்துள்ளார், என்றார்.