பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்: ஒருவர் கைது – மேலும் இரண்டு மாணவர்கள் தலைமறைவு.

24 February 2021, 9:09 pm
Quick Share

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து பாலிடெக்னிக் படிக்கக்கூடிய மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இரண்டு மாணவர்கள் தலைமறைவாக உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் ஆண்கள் மற்றும் பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி தனித்தனியாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் பயிலும் மாணவர்களிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு முன்பகை காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டனர். இந்த வீடியோவானது சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் பள்ளி மாணவர்கள் பத்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் காவல்துறையினர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அழைத்து மாணவர்களின் நலன் கருதி அவர்களிடம் இதுபோன்று தவறுகள் செய்யக்கூடாது என எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டனர்.
தற்போது இந்த வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து தலைமை ஆசிரியர் இராமச்சந்திரன் அளித்த புகாரின் பெயரில் பாலிடெக்னிக் படிக்கக்கூடிய சிவராஜ் என்ற மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பள்ளியில் அத்துமீறி நுழைந்தது, மாணவர்களை அடித்தது மற்றும் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியது உள்ளிட்ட மூன்று பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களை போலீசார் தேடி வரும் நிலையில் மாணவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 12

0

0