காட்டன் சூதாட்டம் விற்பனை படுஜோர்: தினக் கூலிகள் பணம் கட்டி ஏமாந்த விரக்தியில் தற்கொலை செய்து கொள்வது அதிகரிப்பு

Author: Udayaraman
2 August 2021, 5:57 pm
Quick Share

பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில் நெசவுத்தொழில் தொடர்பான பணிகளில் ஆயிரக்கணக்கானோர் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார்கள். அதேபோல் அப்பளத் தொழிலாளர்கள் ,கை வண்டி இழுக்கும் தொழிலாளர்கள் ,விவசாயக் கூலிகள் என ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரம் நகரில் புழங்கிவருகிறார்கள். இவர்கள் செய்யும் பணிகளுக்கு தின கூலி,வாரம் கூலி, மாதம் சம்பளம் என கூலிகள் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலானோர் தினக்கூலிகளாக உள்ளதால் வாங்கிய பணத்தில் பெரும் பகுதியை மதுபானம் அருந்தவும் காட்டன் சூதாட்டம் லாட்டரியில் பணம் கட்டவும் செய்வதால் என்றும் இவர்கள் வாழ்க்கையில் முன்னேறாமல் தினக்கூலிகளாக காலம் கழித்து வருகின்றார்கள்.

காஞ்சிபுரம் நகரில் சமீப காலமாக காட்டன் சூதாட்டம் எனப்படும் மூன்று எண் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த சூதாட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், விவசாய கூலிகள், அப்பள தொழில் செய்யும் தொழிலாளர்கள், மாட்டு வண்டி ஓட்டுநர்கள், மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நபர்கள் என பலர் தினந்தோறும் பணம் கட்டி ஏமாந்து அதன் அழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் ,மனம் பாதித்து ரோடு ரோடாக அலைவதும் , ஏமாந்த பலர் மற்றவர்களை ஏமாற்றுவதும் இப்படிப்பட்ட செயல்கள் நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வணிகர் வீதியில் ஆடிஆர் என்ற மளிகைக்கடையில் காட்டன் சூதாட்டம் எனப்படும் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில் சூதாட்டம் நடைபெறும் வீட்டினுள்ளே அதிரடியாக நுழைந்தனர். காவல்துறையினரை கண்டு சூதாட்டம் ஆட வந்தவர்கள் தலைதெறிக்க தப்பியோடினர். சூதாட்டம் காட்டன் விற்பனை செய்துவந்த பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்து அங்கிருந்த காட்டன் சூதாட்டம் எழுத பயன்படும் அட்டைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது .சிவகாஞ்சி காவல் நிலையத்திலில் வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பி வைத்தது.

கூலிவேலை செய்யும் பலர் இதுபோன்ற காட்டன் சூதாட்டத்தில் பணம் கட்டிவிட்டு கிடைக்காமல் மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கு மாட்டி இறந்து போகின்றனர். பலர் மனநலம் பாதித்த நிலையில் ரோடுகளில் சுற்றி திரிந்து வருகின்றனர். அங்கங்கே இப்படிப்பட்ட காட்டன் சூதாட்டம் நடைபெற்று வருவதை காவல்துறையினர் கண்டும் காணாமலும் செல்வது மிகுந்த வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Views: - 66

0

0