11ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆறடி உயரமுள்ள அரிய வகை சிவன் சிலை கண்டெடுப்பு….

Author: Udhayakumar Raman
17 September 2021, 4:58 pm
Quick Share

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆறடி உயரமுள்ள பிரம்ம சிரச்சேதக மூர்த்தி என்றழைக்கப்படும் அரிய வகை சிவன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தில் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாழடைந்த கந்த பாலீஸ்வரர் ஆலய இடத்திலுள்ள மரம் செடி கொடிகளை அகற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது புதர்களுக்கு இடையே மண்ணில் புதையுண்டு கிடந்த ஆறடி உயரமுள்ள அரிய வகை சிவன் உருவ சிலையை கண்டனர். சம்பவ இடத்துக்கு வந்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில், இந்த சிலையை ஆய்வு செய்த பொழுது இது சிவபெருமானின் பிரம்ம சிரச்சேதக மூர்த்தி சிலை என தெரியவந்தது. இது 11ஆம் நூற்றாண்டை சார்ந்தாகும்.

6 அடி உயரம் 2 அடி அகலம் கொண்டு நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இச்சிலை உள்ளது. தலை முகம் மார்பு ஆகிய பகுதிகள் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தலையில் சிதைந்த நிலை கிரீடமும் இரு காதிகளில் பத்ர குண்டலமும் கழுத்தை ஒட்டி அணிகலன்களாக சரபளியும், வலதுபக்க ஒரு கரத்தில் கத்திரிமுத்திரையில் பிரம்மனின் தலையை ஏந்தியும் ,மற்றொரு கரத்தில் பக்தர்களை அருள் பாலித்தும் இடது பக்க ஒரு கரத்தில் கத்திரிமுத்திரையில் மழுவை ஏந்தியும் மற்றொரு கரத்தை இடுப்பில் கைவைத்து நிலையில் மார்பில் அழகிய அணிகலன்கள் அணிந்து இடுப்பிலிருந்து முட்டி வரை அரையாடையும் கைகால்களில் காப்பு ஆகியவற்றோடு சமபங்க நிலையில் அழகிய கோலத்துடன் சிவன் வீற்றிருக்கிறார்.

இது சிவனின் 64 அவதாரங்களில் 54வது அவதாரமான பிரம்ம சிரச்சேதக மூர்த்தி எனப்படுகிறது. சிவன் பிரம்மா ஆகிய இருவருக்கும் ஐந்து தலைகள் காணப்பட்டன. எல்லோரும் சிவனுக்கு முக்கியத்துவம் அளித்தனர். இது பிரம்மாவிற்கு பெரும் குறையாக தோன்றியது, படைப்புத் தொழிலை சேர்த்து செய்வதால் தானே உயர்ந்தவன் என்கிற கர்வம் ஏற்பட்டது. பிரம்மா கர்வத்துடன் செயல்பட ஆரம்பித்தார். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பிரம்மாவின் கர்வத்தை அடக்கவும் குழப்பத்தை தீர்க்கவும் பிரம்மாவின் ஒரு தலையை தன்னுடைய கரத்தால் சிவன் கிள்ளி எறிந்து விட்டார். இவ்வாறு பிரம்மாவின் சிரசை குறைத்ததால் பிரம்ம சிரச்சேதக மூர்த்தி என்று அழைக்கப்பட்டார் என புராணங்கள் கூறுகின்றன.

தமிழ்நாட்டில் இது போன்ற அரியவகை சிவன் சிலை இதுவரை கண்டறியப்படவில்லை ,இதுதான் முதல் முறை என தமிழ்நாடு தொல்லியல்துறை சென்னை அருங்காட்சியக காப்பாட்சியர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்திற்கு செல்வதற்கு வழி கூட இல்லை, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Views: - 60

0

0