கும்பகோணத்தில் ஒஎல்எக்ஸ் மூலம் வாகனம் விற்பதாக கூறி நூதன கொள்ளை: 4 பேர் கைது

Author: Udhayakumar Raman
25 July 2021, 4:31 pm
Quick Share

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் ஒஎல்எக்ஸ் மூலம் வாகனம் விற்ப்பதாக கூறி வெளியூரிலிருந்து பணத்துடன் வந்த நபர்களை அடித்து அவர்களிடமிருந்து பணத்தை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே சுவாமிமலை மேட்டுதெருவை சேர்ந்த சிபிராஜ் என்பவர் Olx இல் தனது மோட்டார் சைக்கிளை விற்பதாக பதிவு செய்துள்ளார். அந்த பதிவை பார்த்த ‌திருச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சிபிராஜ்க்கு தொடர்புகொண்டு வாகன விபரங்களை கேட்டறிந்து பின்னர் பேரம் பேசி ரூ.70 ஆயிரத்திற்கு பேரம் முடிந்ததையடுத்து நேரில் வந்து வாகனத்தை பார்த்துவிட்டு பணத்தை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து பேருந்தில் பணத்துடன் வருவதாக கார்த்திகேயன், சிபிராஜிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர்களை திருவலஞ்சுழி அருகே இறங்குமாறும் அங்கிருந்து வாகனம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாக சிபிராஜ் கூறியதையடுத்து,

திருவலஞ்சுழியில் இறங்கிய கார்த்திகேயனும் அவரது நண்பர் பிரபு இருவரையும் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு காவிரிகரைக்கு அழைத்துச் சென்று சிபிராஜ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து இருவரையும் தாக்கி அவர்களிடமிருந்த ரூபாய் 70,000 மற்றும் செல்போன்களை பிடுங்கி கொண்டு அடித்து துரத்தி விட்டுள்ளனர். அவர்கள் நள்ளிரவு வழிதெரியாமல் நீண்ட தூரம் நடந்தே வந்து பேருந்து மூலம் திருச்சிக்கு சென்று அங்குள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து வந்த தனிப்படை போலீசார் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மஹாலட்சுமி தலைமையிலான போலீசாருடன் சுவாமிமலை பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது,

கார்த்திகேயன் அவரது நண்பர் பிரபு இருவரையும் சிபிராஜ் மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற வீடியோ பதிவாகி இருந்தது. இதையடுத்து இந்த நூதன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிபிராஜ் மற்றும் அவனது நண்பர்களான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த், ராஷ்கான், அஜய்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ 20,000 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 140

0

0