பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க கோரிய வழக்கு: தமிழக அரசு, ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

31 August 2020, 4:04 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: வாடிப்பட்டி அருகே தாய், தந்தை இருவரையும் இழந்து தவித்து வரும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி சேர்ந்த கருத்தப்பெரியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: அதில், என்னுடைய மகன் வெள்ளைபிரியன் அபிநயா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை மற்றும் நான்கு வயதில் ஆண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெள்ளை பிரியன் மற்றும் அபிநயா இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் அபிநயா இறந்ததாக வெள்ளை பிரியன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் வெள்ளை பிரியன் சிறையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் என்னுடைய நான்கு வயது பேரன் மற்றும் ஆறு வயது பேத்தி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது எனக்கு 67 வயது ஆகிறது மற்றும் என்னுடைய மனைவிக்கு 53 வயது ஆகிறது. இதனால் இவர்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பதற்கு மிகவும் சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்களுக்கான தமிழக இழப்பீட்டுத் திட்டம்,

குழந்தைகளை பாலியல் தாக்குதலில் இருந்து தப்புவதற்கான சட்டம் மற்றும் குற்றச் சட்டம் 2018 இன் படி என்னுடைய 6 வயது பேத்தி மற்றும் நான்கு வயது பேரன் ஆகிய இருவருக்கும் இழப்பீடு தொகையாக ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வார காலம் ஒத்தி வைக்கப்பட்டது.

Views: - 0

0

0