கை சேதமடைந்து சீரமைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலைக்கு கூண்டு அமைக்கும் பணி தீவிரம்

17 May 2021, 1:54 pm
Quick Share

திருச்சி: திருச்சி மரக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் கை சேதமடைந்து சீரமைக்கப்பட்ட எம்ஜிஆர் சிலைக்கு கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி காந்தி மார்கெட் அடுத்துள்ள மரக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் சுமார் 15 வருடத்திற்கு முன்பாக எம்ஜிஆர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையின் கை உடைந்து இருந்த நிலையில் சமூக விரோதிகள் உடைப்பில் ஈடுபட்டதாக அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்த நேரத்தில் சிலைகள் துணியால் மறைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தேர்தலுக்குப் பின்னர் சிலைகளில் துணி அகற்றப்படும் போது பணியாளர்களால் கை சேதமடைந்ததாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மீண்டும் சிலையை சீரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருச்சி உள்ள அனைத்து சிலைகளுக்கும் பாதுகாப்பு கூண்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதன்படி மரக்கடையில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையில் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீரங்கம் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் கூண்டு அமைக்க முயன்ற நிலையில் திராவிடர் கழகம் அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர். அது தற்போது நிலுவையில் உள்ளது. திருச்சியில் ஏற்கனவே தந்தை பெரியார், சட்டமேதை அம்பேத்கர், மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா ஆகியோர் சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 75

0

0