பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரி பெற்றோர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம்

3 November 2020, 8:34 pm
Quick Share

கரூர்: பொம்மநாயக்கன்பட்டி உயர்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரி பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியம் கூடலூர் ஊராட்சி பொம்ம நாயக்கன்பட்டியில் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியை தரம் உயர்த்துவதற்கான ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பள்ளிக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கினர் மேலும், ரூபாய் இரண்டு லட்சம் டெபாசிட் செய்தனர். இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டடம் கட்ட படாததால் மாணவர்கள் மரத்தடி நிழலில் அமர்ந்து பாடம் படிக்கும் ஒரு அவலமான நிலை ஏற்பட்டது.

கடந்த ஆறு மாதங்களாக பள்ளிக்கூடம் செயல்படாது உள்ளது. இந்த நிலையில் பெற்றோர்கள் மீண்டும் பள்ளி திறக்கப்படும் போது தங்கள் குழந்தைகள் மீண்டும் வேப்ப மரத்தடியில் பாடம் படிக்கும் நிலை உருவாகக் கூடாது என்றும், புதிய கட்டிடம் கட்டி தர கோரியும் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தொடர்ந்து கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததின் பேரில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

Views: - 16

0

0