ஓடும் பேருந்தில் கூலித்தொழிலாளிக்கு மாரடைப்பு: காண்போரை சோகத்தில் ஆழ்த்திய மனைவியின் அழுகை
17 November 2020, 11:11 pmதிருப்பத்தூர்: ஆம்பூர் அருகே ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு அதில் பயணம் செய்த கூலித்தொழிலாளி மனைவி கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் அடுத்த பனங்காட்டேரி பகுதியை சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி பாப்பண்ணன். இவர் வாணியம்பாடிக்கு பணிகாரணமாக சென்றுவிட்டு வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தனது மனைவி முருகம்மாளுடன் இணைந்து வாணியம்பாடியிலிருந்து தனியார் பேருந்தில் ஆம்பூர் நோக்கி வந்த போது பாப்பண்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்திலேயே அவர் ஓடும் பேருந்தில் இறந்துள்ளார்.
ஆம்பூர் பேருந்து நிலையம் வந்தவுடன் மனைவி முருக்கம்மாள் கணவரை பார்த்த போது அவர் இறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. பின்னர் தகவலறிந்து வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மாரடைப்பால் இறந்த கூலித்தொழிலாளி பாப்பண்ணன் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டு விவசாய கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் ஆம்பூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.