நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

28 January 2021, 2:21 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாகர்கோவில் நாகராஜா கோவில் நாகதோஷ பரிகார தலங்களில் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் தை திருவிழா ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி ,விழா நாட்களில் தினமும் காலையில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, சுவாமி வாகனத்தில் எழுந்தருளல், மாலையில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, சொல்லரங்கம் போன்றவை நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. காலை நடந்த தேரோட்டத்தில் ஏராளமானோர் தேர் வடம் தொட்டு இழுத்தனர். தேர், தெற்குரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக, பெருந்திரளான பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்தது. தேரோட்டத்தின் போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர். 10-ம் நாள் திருவிழாவான நாளை சிறப்பு அபிஷேகம், சுவாமி ஆறாட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தேரோட்டம் நிகழ்ச்சியை காண குமரி, நெல்லை மாவட்டம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 16

0

0