சிறப்பு காவல் படை காவலர் தற்கொலை: பணிச்சுமையால் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றச்சாட்டு

21 August 2020, 9:34 pm
Quick Share

வேலூர்: வேலூரில் முதல்வர் பாதுகாப்பு பணி முடித்துவிட்டு வந்த சிறப்பு காவல்படையை சேர்ந்த காவலர் பணிச்சுமையாலும், காவல்துறையில் அதிக தொல்லைகளை கொடுத்ததாலும் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் தக்க நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம்,கணியம்பாடி அருகேயுள்ள கட்டுபாடி கிராமத்தை சேர்ந்தவர் இம்ரான் (23). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் 15 ஆவது பெட்டாலியன் பிரிவில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். தற்போது காவல்துறையில் அதிக பணிச்சுமை கொடுத்ததாகவும் தன்னால் காவல்துறையில் பணியாற்ற முடியவில்லை என்றும் மன உளைச்சல் ஏற்படுகிறது எனவே பணியை விட்டு எதாவது கடை வைத்து தொழில் செய்துகொள்வதாக கூறியுள்ளார் ஆனால் வீட்டில் உள்ளவர்கள் காவல்துறை பணி என்பது கிடைப்பது எளிதல்ல எனவே காவல்துறையில் தொடர்ந்து பணியாற்றுமாறு குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை தந்த போது காவேரிப்பாக்கம் பகுதியில் முதல்வர் வருகைக்காக பாதுகாப்பு பணியில் இம்ரான் ஈடுபட்டிருந்தார் . இவர் கடந்த 4 நாட்கள் பணிசுமை அதிகரித்து மன உளைச்சல் ஏற்பட்டதாக நண்பர்களிடம் கூறியுள்ளார் . முதல்வர் வருகை பணி முடிவடைந்து கட்டுபடியில் வீட்டிற்கு வந்து மாலை உணவு சாப்பிட்டு அவரது அறைக்கு தூங்குவதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரம் வெளியில் வரவில்லை. செல்போனிலும் தொடர்புகொண்ட போது செல்போனையும் எடுத்து பேசவில்லை .

இதனால் உறவினர்களும் குடும்பத்தாரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தனது மனைவியின் சேலையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில், இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு இம்ரானை கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தெரிவித்தனர் . இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இம்ரான் காவல்துறையில் சிறப்பு காவல்படையில் பணிசுமை அதிகம் இருப்பதாக கூறி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது காவல்துறை பணியாற்றுபவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதற்கு பணிசுமை தான் காரணம் என கூறப்படுகின்றது.

காவல் துறையினர் இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்ப்பட்ட சண்டை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறுகின்றனர். ஆனால் இவரது தாய் ,தந்தை மற்றும் உறவினர்கள் காவல்துறையின் பணிசுமையினால் தான் தற்கொலை செய்துகொண்டதாகவும், இதற்கான காரணத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 1

0

0