பெண்ணை குளத்தில் தள்ளி கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர்.! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

8 February 2021, 6:07 pm
Quick Share

கன்னியாகுமரி: திருவட்டாறு அருகே பெண்ணை குளத்தில் தள்ளி கொலை செய்தவரையும் அவரது கூட்டாளிகளையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பிணவறை முன்பு இன்று போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மேக்காமண்டபம் சேர்ந்தவர் வின்சென்ட் இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார் இவருடைய மனைவி மேரி ஜெயா அமுதா (45).
நேற்று மதியம் ஜெயா அமுதா ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த அதே ஊரைச் சேர்ந்த மெர்லின் ராஜ் என்ற முன்னாள் ராணுவ வீரர் மேரி ஜெயாவின் நகைகளை பறித்து அவரை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் சத்தம் போட்ட மேரி ஜெயா அமுதாவை குளத்தில் தள்ளி ஆடைகளை கிழித்து தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் கூடினர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பேரிலிருந்து அப்பகுதியில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்ததாகவும் அவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் .

இதில் படுகாயமடைந்த மெர்லின் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மேரி ஜெயா அமுதாவின் உடல் இன்று மதியம் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிணவறை முன்பு மேரி ஜெயா அமுதாவின் உறவினர்கள் மற்றும் அவரது சொந்த ஊரை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பிணவரை முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.

கொலையாளி ராஜ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் .அவர் பல்வேறு தவறுகளை செய்ததால் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது வழிப்பறி மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவரை இந்த ஊரில் வைத்திருக்கக்கூடாது.

அவருக்கு கூட்டாக இருந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரையும் மேலும் அவருக்கு உதவி செய்து வருபவர்களையும் போலீசார் கைது செய்ய வேண்டும் அதுவரை பிணத்தை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் நாகர்கோவில் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0