கண்டெய்னர் லாரி கடத்தல் வழக்கில் 5 பேர் வழக்கு: சுமார் 1 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் பறிமுதல்…

29 August 2020, 5:09 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற கண்டெய்னர் லாரி கடத்தலில் தொடர்புடைய ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் கூட்ரோடு பகுதியில் கடந்த 25ஆம் தேதி மாலை ஐடிசி நிறுவனத்தின் ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் மற்றும் பிஸ்கட் பண்டல்களை ஏற்றிக்கொண்டு சென்னை பெரம்பூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியை காரில் வந்த ஆறு டிப் டாப் மர்ம நபர்கள் மடக்கி லாரி ஓட்டுநரை தாக்கி காரில் ஏற்றி கண்களை கட்டினர். பின்னர் 6 நபர்களில் ஒருவர் லாரியை எடுத்துக்கொள்ள லாரியும் காரும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விரைந்து சென்றது.

காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே காரிலிருந்த ஓட்டுனரை கீழே தள்ளி விட்டு கடத்தல் கும்பல் தப்பியது. மயக்கமடைந்த லாரி ஓட்டுனர் பின்னர் எழுந்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை பகுதியில் ஐடிசி பொருட்களை கன்டெய்னர் லாரிகள் மூலம் ஏஜெண்டுகளுக்கு டெலிவரி செய்யும் யுசிஜி டிரான்ஸ்போர்ட்டின் மேலாளர் முளிதரனிடம் நடந்தவற்றைக் கூறினார். அதனைத் தொடர்ந்து முரளிதரன் ஐடிசி நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துவிட்டு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தலைமையில் ஒரு தனிப்படையும், உதவி காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஒரு தனிப்படையும், குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படையும் என 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்தப்பட்ட லாரியை தீவிரமாக தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா உதவியுடன் வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்ட பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் லாரியை கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து லாரியில் இருந்த சிகரெட் மற்றும் பிஸ்கட் போன்ற பண்டல்களை மினி லாரியில் ஏற்றி பல இடங்களில் பதுக்கி வைக்க உதவியாக இருந்த கொண்ட பாளையத்தை சேர்ந்த மினி லாரி ஓட்டுனரை மடக்கி பிடித்தனர். பின்னர் மாவட்ட தனிப்படை ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதில் சோளிங்கர் ,ராணிப்பேட்டை ,ஆரணி போன்ற பல பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிகரெட் பண்டல்கள் அதிரடியாக மீட்கப்பட்டது. இந்த பொருட்களை கமிஷன் அடிப்படையில் வியாபாரிகளுக்கு மாற்றி பணம் பெறும் 5 கமிஷன் ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் சரக ஏடிஎஸ்பி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கடத்தலுக்கு பிள்ளையார் சுழி போட்ட நபர் ஏற்கனவே ஐடிசி குடோனில் வேலை செய்து கடந்த 4 மாதத்துக்கு முன்பு வேலையை விட்டு நின்று விட்டார் என்பதும் , அந்த நபரின் வழிகாட்டல் படி தான் ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி கடத்தப்பட்டது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. லாரி கடத்தலில் நேரடியாக தொடர்புடைய குற்றவாளிகளை தனிப்படையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மிக திறமையாக புலனாய்வு செய்து 1.52 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மீட்ட ஏஎஸ்பி கார்த்திகேயன், தனிப்படை ஆய்வாளர் மணிமாறன், மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், முரளி மற்றும் காவலர்கள் சீனிவாசன், ராம்மோகன் உள்ளிட்டவர்களுக்கு டிஐஜி சாமுண்டீஸ்வரி அவர்கள் பாராட்டுகள் தெரிவித்தார்.

Views: - 31

0

0