சாவித்திரி பாய் பூலே பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக அறிவிக்க சபரிமாலா வலியுறுத்தல்

Author: Udayaraman
3 January 2021, 7:43 pm
Quick Share

தருமபுரி: மத்திய அரசு சாவித்திரி பாய் பூலே பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக அறிவிக்க வேண்டும் என அரூரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் சபரிமாலா கூறியுள்ளார்.

தருமபுரி மாவட்டம், அரூரில் அண்ணல் அம்பேத்கர் அறிவகம் கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர் கு.ஜெயமணி எழுதிய என் அன்பிற்கினிய… எனும் நூலினை எழுத்தாளர் இரா.சிசுபாலன் வெளியிட்டார். இதில், கவிஞர்கள் சபரிமாலா, மகாலட்சுமி, பொன்னுரங்கன், குறிஞ்சி சீதாராமன், கீரை பிரபாகரன், அகர முதல்வன், ப.செந்தாமரைக்கண்ணன், மருத்துவர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சபரிமாலா செய்தியாளரை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தாய், தந்தையரை இழந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உதவித் தொகைகளை விரைந்து வழங்க வேண்டும், தாய், தந்தையரை இழந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் ரூ. 75 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெறும் வழிமுறைகள் குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு, மாவட்ட ஆட்சியர்கள், ஆசிரியர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய் பூலே பிறந்த தினமான ஜனவரி 3 ஆம் தேதியை ஆசிரியர் தினமாக அறிவிக்க வேண்டும். சாவித்திரி பாய் பூலே பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக அறிவிக்க வலிறுத்தி, கையெழுத்து இயக்கம் அவரது பிறந்த தினமான இன்று முதல் இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளேன். மத்திய அரசு சாவித்திரி பாய் பூலே பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக அறிவிக்க வேண்டும். என தெரிவித்தார்.

Views: - 57

0

0