தமிழக அரசின் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள் அமல்: தூத்துக்குடியில் கடுமையாக்கப்படும் வாகன தணிக்கை

15 May 2021, 2:57 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஊரடங்கு விதிகளை கடுமையாக பின்பற்றும் பொருட்டு வாகன தணிக்கையில் சிக்கியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 4-ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தி அறிவிப்பு வெளியிட்டது. முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகளுக்கு தளர்வுடன் கூடிய கட்டுப்பாடுகளையும் விதித்தது. ஆனால் இந்த தளர்வுகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் கட்டுப்பாடின்றி ஊர் சுற்றுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஊரடங்கை  கடுமையாக்குவது குறித்த ஆலோசனை கூட்டம் தமிழக சட்டப்பேரவை கூட்டரங்கில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஊரடங்கை  மேலும் கடுமையாக்குவது குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து இன்று முதல் தமிழகத்தில் ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேனீர் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வாகன தணிக்கையை கடுமையாகவும் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும்,

சமூக இடைவெளி இன்றி இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 17-ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்குள்ளேயே திருமணம், துக்க நிகழ்ச்சி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வோர் இ-பதிவு முறையை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரில் இன்று 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஆங்கில மருந்து கடைகள், நாட்டு மருந்து கடைகள் தவிர மற்ற பொருள்களை விற்பனை செய்யும் வணிக கடைகள் அனைத்தும் தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து மூடப்பட்டன. ஊரடங்கு விதிகளை கடுமையாக பின்பற்றும் பொருட்டு நகரின் முக்கிய சந்திப்புகளான வி.வி.டி. சந்திப்பு, தென்பாகம் காவல் நிலையம், குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு, வ.உ.சி.மார்க்கெட் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வாகன தணிக்கையில் சிக்கியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை எச்சரிக்கும் பொருட்டு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்புகள் ஒலிபரப்பு செய்தனர். பொதுமக்கள் அலட்சியமாக இருப்பதை தடுபபதற்காக போலீசார்  ரோந்து வாகனங்களிலும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

Views: - 40

0

0