ஈடன் கடற்கரையில் நவம்பர் 1ம் தேதி நீலக்கொடி ஏற்றப்படும்: அமைச்சர் லஷ்மி நாராயணன் தகவல்…

Author: kavin kumar
23 September 2021, 4:56 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியின் சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரைக்கு சர்வதேச அளவிலான ப்ளூ பிளாக் பீச் சான்றிதழ் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது புதுச்சேரியின் சுற்றுலாவை மேலும் மேம்படுத்த உதவும் என்றும் சுற்றுலா துறை அமைச்சர் லஷ்மி நாராயணன் தெரிவித்துள்ளார்

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அமைப்பு உலகம் முழுவதும் உள்ள தூய்மையான கடற்கரைகளை தேர்ந்தெடுத்து Blue Flag எனப்படும் நீலக்கொடி கடற்கரை என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது. இந்த சான்றிதழ் ஆனது சுற்றுச்சூழல் மேலாண்மை, நீரின் தரம், நீலநிறம், பாதுகாப்பு, குளிப்பதற்கு ஏற்ற சுகாதாரமான நீர், உள்ளிட்ட 33 அம்சங்களை ஆராய்ந்து வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் பெற்ற கடற்கரையானது உலகில் அழகான கடற்கரை மற்றும் சுத்தமான கடற்கரை என பெயரிடப்படுகின்றது. அதன்படி புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்திலுள்ள ஈடன் கடற்கரைக்கு தற்போது இந்த நீலக்கொடி கடற்கரை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. நீல கொடி அங்கீகாரம் கிடைத்துள்ள சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, 2 கிலோமீட்டர் தொலைவிற்கு அழகிய மணல் பரப்பை கொண்டுள்ளது.

இதில் 800 மீட்டர் தொலைவு மணல் பரப்பில் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடற்கரைக்கு நீலக்கொடி அங்கீகாரம் கிடைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு சுத்தமான குடிநீர், கழிப்பிடம்,பார்க், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம், போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன, சுற்றுலா பயணிகள் குளித்த பிறகு உடை மாற்றும் அறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கடற்கரையில் பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கே கடலில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினால் மீட்பு பணிக்கு வீரர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளால் சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரைக்கு நீலக்கொடி கடற்கரை அந்தஸ்து கிடைத்துள்ளது.

இதனை அடுத்து சின்னவீராம்பட்டினம் கடற்கரையில் அழகிய சுத்தமான கடற்கரை என்பதை பிரதிபலிக்கும் வகையில் நீல கொடி ஏற்றப்பட உள்ளது. இதனால் சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈடன் கடற்கரை ஈர்க்கும் .வெளிநாடு பல மாநில சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரியின் ஈடன் கடற்கரைக்கு நீலக்கொடி அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலா துறை அமைச்சர் லஷ்மிநாராயணன், சின்ன வீராம்பட்டினம் கடற்கரை சர்வதேச அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்திய அளவில் உள்ள 10 சிறந்த கடற்கரையில் புதுச்சேரியும் இடம்பிடித்துள்ளது சுற்றுலாவை மேலும் மேம்படுத்த உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் வருகின்ற நவம்பர் 1ம் தேதியான புதுச்சேரி விடுதலை தினத்தன்று இந்த கடற்கரையில் நீலக்கொடி ஏற்றப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த அங்கீகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ள கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

Views: - 263

0

0