புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது: பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பேட்டி…

7 September 2020, 11:01 pm
Quick Share

கிருஷ்ணகிரி: புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதால் சட்டப்பேரவைத் தேர்தலை ஆறு மாத காலத்திற்கு ஒத்தி வைத்து, கவர்னர் ஆட்சி மூலம் மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்க வேண்டும். பாஜகவுடன் கூட்டணி தேவை இல்லை என்று கூறும் தமிழக அமைச்சர்கள் தைரியமிருந்தால் பிஜேபி கூட்டணி வேணாம்னு டெல்லியில் கூறட்டும். தமிழக அமைச்சர்கள் கூறுவதைப் போல் தமிழகத்தை பிரிக்க முடியாது.

தமிழ்நாடு ஒற்றுமைக்காக, அதன் வளர்ச்சிக்காக பாஜக பாடுபடும். அமைச்சர்கள் கூறும் கருத்தை பற்றி கவலை இல்லை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரின் கருத்துக்களே வலிமை சேர்க்கும். அதுபோலவே புதிய கல்விக் கொள்கை, புதிய மின்சார திட்டம் இது எல்லாம் தமிழ்நாட்டை பாதிக்காது. இளைஞர்களுக்கு, படித்தவருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு மொழி ஒன்று தடையாக இருக்காது. ஹிந்தியை கட்டாயமாக படிக்கவேண்டும் என்று யாருமே சொல்லவில்லை.

அது ஒரு விருப்பப் பாடம், வேண்டும் என்றால் எடுத்துக்கொண்டு படிக்கலாம், இல்லை என்றால் விட்டுவிடலாம். கன்னடர்கள் அதைப் படிக்கிறார்கள், ஆந்திரத்தைச் சேர்ந்தவர்கள் படிக்கிறார்கள், இங்கே மட்டும் எதிர்ப்பு. அதை வைத்து அரசியல் செய்ய கூடியவர்கள் தான் திராவிட இயக்கங்கள். இந்தியாவில் இந்தி அதிகமாக பேசப்படுகிறது. தமிழகத்தில் தமிழ் வேண்டும், இந்தியாவிற்கு இந்தி வேண்டும். கட்டாயப் படுத்தவில்லை, படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோமே தவிர திணிக்கவில்லை.

இது தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. அது போலத்தான் மின்சாரம் புதிய கொள்கை என்னவென்று சொன்னால், தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்க கூடிய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறது. அதை மாற்றியாக வேண்டும் என்றால் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றுதான் மத்திய அரசாங்கம் முனைகிறது. தவிர இதையெல்லாம் மாற்றிவிட்டு மத்திய அரசாங்க ஏதோ அடைவதற்காக அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் தெரிவித்தார்.

Views: - 0

0

0