10 வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது: 75 சவரன் நகை மீட்பு…

20 July 2021, 9:31 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: பல்வேறு மாவட்டங்களில் உள்ள வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளையனை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 75 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேலந்தல் கிராமத்தில் கடந்த 16ஆம் தேதி தண்டபாணி என்பவரின் வீட்டில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்திருப்பதாக மணலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, திருக்கோவிலூர் டிஎஸ்பி கங்காதரன் மேற்பார்வையில் ஆய்வாளர் பாபு தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சிவச்சந்திரன், அன்பழகன், திருமால், ராஜசேகரன், ஜெயச்சந்திரன், உலகநாதன் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி கூட்டுரோட்டில் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வடகரைதாயனூர் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மகன் காமராஜ் என்பது தெரியவந்தது. இவர் சில தினங்களுக்கு முன்பு மேலந்தல் கிராமத்தில் நகைகள் திருடியது தெரியவந்தது. மேலும் இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டைப் பூட்டிவிட்டு 100 நாள் (மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம்) வேலைக்கு செல்லும் வீடுகளை குறிவைத்து இவர் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணலூர்பேட்டை, திருப்பாலபந்தல், வடபொன்பரப்பி, சங்கராபுரம் இதை சுற்றியுள்ள கிராமங்களிலும் விழுப்புரம் மாவட்டத்தில் கெடார், ஏழுசெம்பொன் இதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10 வீடுகளில் தான் கைவரிசை காட்டி திருடி இருப்பதாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இவரிடம் இருந்து 75 சவரன் தங்க நகைகளையும், 250 கிராம் வெள்ளி நகைகளையும், 25 ஆயிரம் ரொக்கப் பணத்தையும், 2 கார்கள், மற்றும் 1 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து, சிறைக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர். காவல் துறைக்கு தொடர்ந்து சவாலாக இருந்த கொள்ளையின் பிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதனை இன்று மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் நேரில் பார்வையிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;- மணலூர்பேட்டை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராவை பரிசோதனை செய்தபோது அதன் மூலம் சில காட்சிகள் கிடைத்தது, இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் காமராஜ் என்பவர் பிடிபட்டார், இவருடைய கைரேகையை சோதித்துப் பார்த்ததில் கடந்த சில தினங்களாக கொள்ளையடிக்கப்பட்ட தடயங்களும் ஒன்றாக இருந்தது. இவர் கடந்த 8 வருடங்களாக பகல்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் இவர் விழுப்புரம் மாவட்டத்தில் நிலங்களை வாங்கிப் போட்டு உள்ளார் இவருக்கும் கூட்டாளிகள் இருக்கின்றார்கள் இவை அனைத்தும் நீதிமன்றத்தில் முழுமையான விசாரணையின் போது சமர்ப்பிப்பது இவருக்கு சட்டப்படி அனைத்து தண்டனைகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். உடன் டிஎஸ்பி கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Views: - 79

0

0