திருநங்கைகளுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்றப்படி வேலை: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அதிரடி திட்டம்

6 September 2020, 3:58 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகளுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்றப்படி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் ஆகஸ்டு மாதம் வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தொடர்ந்து, செப்டம்பர் 1-ந்தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தளர்வில்லா ஊரடங்கையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, செப்டம்பர் மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு உதவிடும் வகையில் மத்தியபாகம் காவல் நிலையம் சார்பில் இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி குரூஸ் பர்னாந்து சிலை அருகே நடைபெற்றது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த 50 திருநங்கைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அரிசி பைகளை வழங்கினார். தொடர்ந்து, நலிவடைந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் அரிசி பைகள், கபசுர குடிநீர், முகக்கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தமிழக அரசு ஊரடங்கில் தளர்வினை அறிவித்த போதிலும் மக்கள் சுய கட்டுப்பாடுடன் சமூக விலகலை கடைபிடித்தால்தான் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என கூறினார். நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட திருநங்கைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கூறும்பொழுது, எங்கள் திருநங்கை சமூகத்தில் நல்ல கல்வி அறிவு பெற்று பட்டப் படிப்பு பயின்ற பலரும் உள்ளனர். அவர்கள் வேலையின்றி தவித்து வருவதால் திருநங்கை சமூகத்தை சேர்ந்த படித்த திருநங்கைகளுக்கு ஏதேனும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தால் உதவிகரமாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், படித்த திருநங்கைகள் மட்டுமல்லாமல் படிக்காத திருநங்கைகளின் சுயவிபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை போட்டோவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கினால் நிச்சயம் அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த திருநங்கைகள் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு நன்றி தெரிவித்தனர்.

Views: - 0

0

0