திருச்சியில் இருவேறு இடங்களில் இடி தாக்கி ஒரு பெண் உட்பட 2 பேர் பலி
Author: kavin kumar26 October 2021, 1:53 pm
திருச்சி: திருவெறும்பூர் பகுதியில் ஒரு பெண் உட்பட 2 பேர் இடி தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி கிளிமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் வேலாயுதம், அதே பகுதியை சேர்ந்த பாண்டு மகன் சங்கர் உட்பட சிலர் திருச்சி மாவட்டம். திருவெறும்பூர் அடுத்துள்ள பத்தாளப்பேட்டை பகுதியில் தங்கி விவசாய கூலியாக வேலை பார்த்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த போது வேலை பார்த்தவர்கள் கரையில் மழைக்கு ஒதுங்குவதற்காக வந்தபோது வேலாயுதம் மற்றும் சங்கர் இருவரையும் இடி மின்னல் பலமாக தாக்கியது. இதில் வேலாயுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சங்கர் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதேபோல் தஞ்சை மாவட்டம் இந்தலூர் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த சின்னையன் மகள் ரங்கம்மாள் இவர் அந்த பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளர்களுடன் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள கிளியூர் பகுதியில் சம்பா நாற்று நடும் பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது இடி மின்னல் தாக்கியது.இதில் சம்பவ இடத்திலேயே ரங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த வேலாயுதம் மற்றும் ரங்கம்மாள் ஆகியோரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் காயமடைந்த சங்கரை சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0