காதலிக்க மறுத்த இளம்பெண் கத்தி முனையில் கடத்தல்: போதை ஆசாமிகள் கைது

8 July 2021, 6:31 pm
Quick Share

சென்னை: புளியந்தோப்பு அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி ஆட்டோவில் கடத்திய போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு கே.எம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரோசி. இவரது 19 வயது மகள் வைசாலி 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிப் புரிந்து வருகின்றார். வைசாலி பணி முடிந்து சூளை அஷ்டபுஜம் சாலை வழியாக நடந்து கொண்டிருந்த போது அவரது பக்கத்து தெருவில் வசிக்கும் தினேஷ் (எ) ஹைட் தினேஷ்(25) என்ற வாலிபர் கத்தி முனையில் வைசாலியை ஆட்டோவில் கடத்தி கொண்டு சிந்தாதிரிபேட்டை , பாரிமுனை , எண்ணூர் ஆகிய பகுதிகளில் சுற்றியுள்ளார். பின்னர் வைசாலியை அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளார். இதனால் பயந்து போன வைசாலி உடனே தனது தாயிடம் செல்போன் மூலமாக தினேஷ் தன்னை கடத்தி விட்டதாகவும், தற்பொழுது எண்ணூரில் ஒரு வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தாய் ரோசி உடனே இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வைசாலியை தினேஷ் எண்ணூரில் இருந்து கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று பூட்டிவிட்டு வெளியே சென்றார். வைசாலி உடனே தாய்க்கு தான் இருக்கும் இடத்தை தெரிவித்ததை அடுத்து ரோசி போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அங்கு சென்ற போலீசார் வைசாலியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாகவும்,

அதற்கு தான் மறுப்பு தெரிவித்தால் தன்னை கத்திமுனையில் ஆட்டோவில் கடத்தி சென்றாக தெரியவந்தது.பின்னர் அவரை தாயிடம் ஒப்படைத்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட தினேஷ் சென்ட்ரலில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் அங்கு சென்ற போலீசார் கஞ்சா போதையில் இருந்த தினேஷ் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த இம்ரான் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 130

0

0