சப்பாத்திக்கு மாவு பிசையாமலே புசு புசு சப்பாத்தி செய்ய உங்களுக்கு ஒரு இரகசிய டிப்ஸ்…!!!

2 March 2021, 11:33 am
Quick Share

சப்பாத்தி என்றால் பலருக்கும் பிடிக்கும். அதனோடு வெஜிடபிள் குருமா, நான்வெஜ் குருமா, சால்னா, உருளைக்கிழங்கு மசாலா என்று பல விதமான சைட் டிஷ் செய்து சாப்பிடலாம். ஆனால் சப்பாத்தி போட வேண்டும் என்றால் அது ஒரு பெரிய வேலை என்று பலருக்கும்  தோன்றும். கஷ்டப்பட்டு மாவு பிசைய வேண்டுமே என அலுத்து கொள்வார்கள். 

சப்பாத்தியை பொறுத்தவரை மாவு எந்த அளவுக்கு பிசைகிறோமோ அந்த அளவுக்கு அது சாஃப்டாக இருக்கும். மாவு பிசைந்த பிறகு அதனை உருண்டையாக உருட்ட வேண்டும். பிறகு சப்பாத்தி கட்டையை பயன்படுத்தி உருண்டையை விரிக்க வேண்டும். இவ்வளவு வேலை இருக்கிறது. இவ்வளவு செய்த பிறகும் சில சமயங்களில் சப்பாத்தி நினைத்த அளவிற்கு சாஃப்டாக இருக்காது. 

இதன் காரணமாகவே பலர் சப்பாத்தி செய்வதையே தவிர்த்து விடுவார்கள். ஆனால் இனி அப்படி கிடையாது. சப்பாத்தி சுடுவதற்கு ஒரு எளிமையான வழி ஒன்று உள்ளது. ஆச்சரிமாக உள்ளதா… 

ஆமாம்… இனி சப்பாத்தி சுட வேண்டும் என்ற ஆசை வந்தால் இட்லிக்கு மாவு அரைப்பது போல கோதுமை மாவை கொஞ்சமாக உப்பு போட்டு கரைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்து இருந்தால் அதில் நசுக்கிய பூண்டு, புதினா போன்றவற்றை கூட சேர்த்து கார்லிக் பராத்தா, மின்ட் பராத்தா போல செய்வதற்கு மாவை கெட்டியாக கரைத்து கொள்ளவும். 

இப்போது அடுப்பில் தோசை கல்லை வையுங்கள். கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தேய்த்து கொள்ளவும். எண்ணெய் அதிகமாகாமல் பார்த்து கொள்ளவும். ஏனெனில் எண்ணெய் அதிகமானால் சப்பாத்தி வட்டமாக சுடுவது கஷ்டமாக இருக்கும். தோசைக்கல் நன்றாக காய்ந்த பின் அதில் ஒரு கரண்டி மாவை கெட்டியான பதத்தில்  ஊற்றி வட்டமாக்கி கொள்ளுங்கள். 

சப்பாத்தி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். மேற்புறத்தில் கலர் நன்றாக மாறியதும் அதை பொறுமையாக திருப்பி போடவும். இதன் மீது  எண்ணெய் ஊற்றி லேசாக கரண்டியை பயன்படுத்தி  அழுத்தி விடவும். சப்பாத்தியை சுற்றிலும் தான் அழுத்த வேண்டும். பிறகு மற்றொரு பக்கமும் திருப்பி போட்டு அழுத்தவும். அடுப்பு மிதமான தீயில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். 

இதே போல மாறி மாறி திருப்பி திருப்பி போட வேண்டும். சப்பாத்தி போல உப்பி வந்ததும் அதனை எடுத்து விடலாம். அவ்வளவு தான்… புசு புசு சப்பாத்தி தயார். இதே மாதிரி எல்லா சப்பாத்தியையும் சுட்டு எடுங்கள். சப்பாத்தி சுலபமாக ரெடியாகி விடும். கண்டிப்பாக இதனை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.

Views: - 234

1

0