குழந்தைகளை கேட்டு கேட்டு சாப்பிட வைக்கும் கேழ்வரகு, கம்பு ரொட்டி!!!

12 January 2021, 11:30 am
Quick Share

இன்றைய தலைமுறையினருக்கு கம்பு, கேழ்வரகின் நன்மைகள் தெரிவதில்லை. ஆகவே அவர்கள் வழியில் சென்று தான் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை நாம் வழங்க வேண்டி உள்ளது. பீட்சா போல கேழ்வரகு, கம்பு ரொட்டி செய்து கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வார்கள். அந்த காலத்தில் நம் முன்னோர்களின் தினசரி உணவு பட்டியலில் கண்டிப்பாக கம்பு மற்றும் கேழ்வரகு இருக்கும். அது வழங்கும் அபார நன்மைகளை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். எனவே முதலில் நாம் கம்பு மற்றும் கேழ்வரகின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

கேழ்வரகு மற்றும் கம்பின் நன்மைகள்:

*வலுவான எலும்புகளுக்கு கம்பு மற்றும் கேழ்வரகு மிகவும் உதவுகிறது.

*கம்பு மற்றும் கேழ்வரகில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் மூட்டு வலியை போக்குகிறது. 

*கேழ்வரகு கால்சியத்தின் சிறந்த களஞ்சியமாகும். இது ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு முறிவு அபாயத்தை குறைப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது. 

*அதே நேரத்தில் கம்பில் காணப்படும் பாஸ்பரஸ் எலும்பு வளர்வதற்கு உதவுகிறது. 

இப்போது குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி கேழ்வரகு மற்றும் கம்பு ரொட்டி எப்படி செய்வது என பார்க்கலாம். 

கேழ்வரகு ரொட்டி செய்ய தேவையில்லை பொருட்கள்:

கேழ்வரகு மாவு- 1/2 கப்

நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட்- 1/4 கப்

தயிர்- 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும். இதனோடு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளுங்கள். இதனை நான்கு பாகங்களாக பிரித்து தோசைக்கல்லில் ஒவ்வொன்றாக ஊற்றவும். மாவை வட்ட வடிவில் ஊற்றி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு எடுக்கவும். 

கம்பு ரொட்டி செய்ய தேவையான பொருட்கள்:

கம்பு- 1 கப்

தண்ணீர்- 1/2 கப்

நறுக்கிய வெங்காயம்- 2 

துருவிய தேங்காய்- 1/4 கப்

மிளகு- 6

கொத்தமல்லி தழை- 1 கைப்பிடி

கறிவேப்பிலை- 2 கொத்து

இந்துப்பு- 1/4 தேக்கரண்டி

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு துருவிய தேங்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்து வதக்கவும். இதனை ஓரளவு ஆற வைத்து கம்பு மாவில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைக்கவும். இதனை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அதனை தட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும். அருமையான கம்பு ரொட்டி தயார்.