இன்றே செய்து பாருங்கள் ருசியான மொறு மொறு வெண்டைக்காய்!!!

29 June 2020, 7:24 pm
Quick Share

வெண்டைக்காய் சாம்பார் சாப்பிட்டு இருப்பீங்க… வெண்டைக்காய் வறுவல் சாப்பிட்டு இருப்பீங்க… மொறு மொறு வெண்டைக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா…??? இன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் ரெசிபி அது தான். அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய மொறு மொறு வெண்டைக்காய் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய்- 1/4 கிலோ

கடலை மாவு- 1/2 கப்

அரிசி மாவு- ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

சாட் மசாலா- ஒரு தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

சீரகம்- 1/2 தேக்கரண்டி

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை நன்றாக கழுவி துடைத்து எடுத்து கொள்ளவும். இல்லையெனில் நறுக்கும் போது வழ வழவென்று ஒட்டும். இரு முனைகளையும் நறுக்கி எறிந்து விட்டு வெண்டைக்காயை நீள வாக்கில் மெலிசாக வெட்டி கொள்ளவும்.

வெட்டிய வெண்டைக்காயை ஒரு பெரிய பவுல் ஒன்றில் போட்டு தேவையான அளவு உப்பு, ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி சாட் மசாலா  சேர்த்து நன்றாக கிளறுங்கள். மசாலாக்கள் அனைத்தும் நன்றாக வெண்டைக்காயில் படும்படி கிளற வேண்டும்.

அடுத்ததாக ஒரு தேக்கரண்டி சீரகம், 1/2 கப் கடலை மாவு, ஒரு தேக்கரண்டி அரசி மாவு சேர்த்து கலந்து விடுங்கள். அரிசி மாவு சேர்த்தால் தான் வெண்டைக்காய் மொறு மொறுவென்று இருக்கும். இதனை பத்து நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெண்டைக்காயை போட்டு பொரித்து எடுத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான்… சுவையான மொறு மொறு வெண்டைக்காய் தயார்.