உங்க வீட்ல நான்கு முட்டை இருந்தால் போதும்… இந்த ருசியான மொறு மொறு முட்டை வடையை செய்து என்ஜாய் பண்ணுங்க!!!

29 August 2020, 11:00 am
Quick Share

இன்று நாம் பார்க்க இருப்பது மிகவும் ருசியான முட்டை வடை. இது மாலை நேரங்களில் டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். அல்லது சாண்ட்விச் உள்ளே வைத்து காலை சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிட அட்டகாசமான காம்பினேஷன் இது. தவறாமல் இதனை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். இப்போது முட்டை வடை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…..

தேவையான பொருட்கள்:

முட்டை- 5

வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 2

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

சீரகத் தூள்- 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி

நறுக்கிய இஞ்சி- ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கொத்து

கொத்தமல்லி தழை- சிறிதளவு

மிளகு தூள்- 1/2 தேக்கரண்டி

கடலை மாவு- 2 தேக்கரண்டி

அரிசி மாவு- ஒரு தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

முட்டை வடை செய்ய முதலில் நான்கு முட்டையை வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள். வேக வைத்த முட்டைகளை துருவி கொள்ளலாம். ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய முட்டை, பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, ஒரு தேக்கரண்டி இஞ்சி ஆகியவை சேர்த்து கிளறவும்.

கூடவே இரண்டு தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி சீரகத் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 1/2 தேக்கரண்டி மிளகு தூள், 2 தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்போது தனி கிண்ணத்தில் ஒரு  முட்டையை உடைத்து ஊற்றி அடித்து கொள்ளவும். 

இதில் பாதி மட்டும் கலந்து வைத்த மாவில் சேர்த்து பிசையவும். அப்போது தான் பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வரும். பிறகு உருண்டைகளாக பிடித்து வடை போல தட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி கொள்ளுங்கள். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். தட்டி வைத்த வடைகளை போட்டு இரு பக்கத்திலும் வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும். ருசியான மொறு மொறு முட்டை வடை தயார். 

Views: - 44

0

0