மெது மெதுன்னு சுவையான ஸ்பான்ஜ் கேக் குக்கரில் செய்வோமா????

21 May 2020, 4:48 pm
how to make sponge like cake in home
Quick Share

கடைகளில் வாங்கப்படும் அனைத்து விதமான கேக்கிற்கும் தளமாக இருக்கக் கூடிய ஸ்பான்ஜ் கேக்கை தான் இன்று நாம் தயார் செய்ய போகிறோம். இதனை இன்று நாம் குக்கரில் செய்ய போவதால் அனைவருமே இதனை அவர்களது வீட்டில் செய்து மகிழலாம். இப்போது இதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு- 1 கப்

முட்டை- 4

வெண்ணெய்- 1/4 கப்

சர்க்கரை- 3/4 கப்

பால்- 1/4 கப்

வெண்ணிலா எசன்ஸ்- 1 தேக்கரண்டி

பேக்கிங் சோடா- 1 தேக்கரண்டி

உப்பு- 1/4 தேக்கரண்டி

செய்முறை:

ஸ்பான்ஜ் கேக் செய்வதற்கு முதலில் குக்கரை சூடு செய்ய வேண்டும். அதற்கு குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஒரு லேயர் உப்பு கொட்டி அதன் மேல் ஒரு ஸ்டாண்டு வைக்க வேண்டும். அதன் மீது ஒட்டை போட்ட ஒரு தட்டை வைத்து கொள்ளவும். இப்போது குக்கரை மூடி விசில் போடாமல் மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் சூடு செய்து கொள்ள வேண்டும்.

குக்கர் சூடாகும் போது நாம் கேக்கிற்கு மாவு தயாரித்து கொள்ளலாம். அதற்கு முதலில் நான்கு முட்டை எடுத்து அதன் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனித்தனியாக பிரித்து எடுக்கவும். பிரித்த எடுத்த வெள்ளை கருவை நன்றாக நுரை பொங்கி வரும் அளவிற்கு 5 – 6 நிமிடங்கள் அடித்து தனியாக வைத்து கொள்ளுங்கள். 

இதே போல மஞ்சள் கருவையும் அதன் நிறம் லேசாக மாறி வரும் வரை அடித்து கொள்ளலாம். இந்த அடித்து வைத்த மஞ்சள் கருவோடு 1/4 கப் வெண்ணெய், 3/4 கப் சர்க்கரை, 1/4 கப் பால், ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ், ஒரு கப் மைதா மாவு, ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா, 1/4 தேக்கரண்டி உப்பு போட்டு பொருமையாக கலந்து கொள்ளவும்.

நாம் அடித்து வைத்த வெள்ளை கருவை இதில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அழுத்தம் கொடுக்காமல் கிளறி விடவும். அனைத்தையும் போட்டு கிளறி விட்ட பிறகு ஒரு அடி கனமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தின் ஓரங்களில் வெண்ணெய் தடவி அடியில் பட்டர் பேப்பர் போட்டு அதனுள்ளே கலந்து வைத்த மாவை ஊற்றி குக்கர் சூடானதும் அதில் வையுங்கள்.

உங்களிடம் பேக்கிங் பேன் இருந்தாலும் அதனை பயன்படுத்தி கொள்ளலாம். பாத்திரத்தின் ஓரங்கள் குக்கரை தொடாதவாறு பார்த்து கொள்ளுங்கள். இப்போது குக்கரை மூடி விசில் போடாமல் 35 – 40 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைத்து கொள்ளவும். 35 நிமிடங்கள் கழித்து ஒரு கம்பியை உள்ளே விட்டு பார்க்கும் போது கேக் ஒட்டாமல் வந்தால் அடுப்பை அணைத்து கொள்ளலாம். கேக்கை உடனடியாக பாத்திரத்தில் இருந்து எடுக்க கூடாது. 10 – 15 நிமிடங்கள் ஆறிய பின் கேக்கை எடுத்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Leave a Reply