எளிய முறையில் மணக்க மணக்க பிரஷர் குக்கரில் மட்டன் பிரியாணி…!!!

26 August 2020, 6:49 pm
Quick Share

பிரியாணி என்றாலே ஸ்பெஷல் தான். அதிலும் மட்டன் பிரியாணி ரொம்ப ஸ்பெஷல். இன்றைக்கு பிரஷர் குக்கரில் மட்டன் பிரியாணி எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க…

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி- 400 கிராம்

மட்டன்- 400 கிராம்

பெரிய வெங்காயம்- 1

தக்காளி- 150 கிராம்

நட்சத்திர சோம்பு- 1

ஜாவித்திரி- 1

பட்டை- 1

ஏலக்காய்- 6

கிராம்பு- 7

பிரியாணி இலை- 3

சீரகம்- 1 தேக்கரண்டி

சோம்பு- 1/2 தேக்கரண்டி

மிளகு- 1/2 தேக்கரண்டி

வர மல்லி- 2 தேக்கரண்டி

எண்ணெய்- 2 தேக்கரண்டி

நெய்- 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 5

இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

தயிர்- 1/2 கப்

கொத்தமல்லி தழை- சிறிதளவு

புதினா- ஒரு கையளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

இந்த மட்டன் பிரியாணியை செய்ய இன்று நாம் ஃபிரஷாக அரைத்த மசாலாவை பயன்படுத்தப் போகிறோம். அதற்கு ஒரு வாணலியில் ஒரு நட்சத்திர சோம்பு, ஒரு ஜாவித்திரி, ஒரு இன்ச் அளவு பட்டை, 3 ஏலக்காய், 4 கிராம்பு, ஒரு தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி சோம்பு, 1/2 தேக்கரண்டி மிளகு, 2 தேக்கரண்டி வர மல்லி, ஒரு பிரியாணி இலையை போட்டு மிதமான சூட்டில் வறுக்கவும்.

பட்டை வகைகள் அனைத்தும் வறுபட்டு கலர் மாறியதும் அதனை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து தூள் செய்து எடுத்துக் கொள்ளவும்.  பிறகு குக்கரில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் இரண்டு தேக்கரண்டி  நெய் ஊற்றுங்கள். நெய் உருகியதும் இரண்டு பிரியாணி இலை, 3 ஏலக்காய், 3 கிராம்பு, ஒரு பெரிய வெங்காயம், தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். 

பிரியாணிக்கு வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வதங்கி இருந்தால் தான் சுவையாக இருக்கும். அதே சமயம் வெங்காயம் கரிந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு 5 பச்சை மிளகாய், இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், நாம் ஃபிரஷாக அரைத்து வைத்த மசாலா, ஒன்றில் இருந்து இரண்டு தேக்கரண்டி  மிளகாய் தூள், சிறிதளவு கொத்தமல்லி தழை, ஒரு கையளவு புதினா, 150 கிராம் தக்காளி போட்டு தக்காளி நன்றாக பேஸ்ட் போல் வரும் வரை வதக்கவும்.

பின்பு 1/2 கப் தயிர் ஊற்றுங்கள். போது பிரியாணிக்கு அரிசியும் மட்டனும் சம அளவு இருந்தால் தான் சுவை கூடுதலாக இருக்கும். அதனால் 400 கிராம் மட்டன் மற்றும் பாஸ்மதி அரிசி எடுத்துக் கொள்ளவும். இப்போது மட்டனை சேர்த்து நன்றாக கிளறி ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மூன்றில் இருந்து நான்கு விசில் வரை வர விடவும்.

விசில் வந்த பின் அரை மணி நேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை தண்ணீர் வடிகட்டி சேர்க்கவும். ஏற்கனவே ஒரு கப் தண்ணீர் ஊற்றி விட்டதால் மேலும் ஒரு கப் தண்ணீர் மட்டும் ஊற்றி குக்கரை மூடி குறைவான சூட்டில் ஒரு விசில் மட்டும் வர விட்டு பின் அடுப்பை அணைத்து விட்டு 15 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். 15 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து சுவையான மட்டன் பிரியாணியை பரிமாறலாம்.

Views: - 44

0

0