மீந்து போன சாதத்தை இனியும் வேஸ்ட் பண்ணாதீங்க… பத்தே நிமிடத்தில் ருசியான வடையாக மாற்றி விடலாம்!!!
8 August 2020, 11:54 amபொதுவாக மதியம் வடித்த சாதம் மீதி இருந்தால் அதனை என்ன செய்வது என தெரியாமல் அதில் தண்ணீர் ஊற்றி வைப்பது வழக்கம். தண்ணீர் ஊற்றிய சாதம் உடலுக்கு நல்லது என்றாலும் அதனை அனைவரும் விரும்புவதில்லை. எனவே மீதம் இருக்கும் சாதத்தை சுவையானதாக மாற்ற ஒரு அருமையான ரெசிபியை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- சாதம்- 1 கப்
- வெங்காயம்- 1
- நறுக்கிய இஞ்சி- ஒரு தேக்கரண்டி
- நறுக்கிய பூண்டு- ஒரு தேக்கரண்டி
- நறுக்கிய பச்சை மிளகாய்- ஒரு தேக்கரண்டி
- உருளைக்கிழங்கு- 1
- கேரட்- 1
- புதினா- சிறிதளவு
- கொத்தமல்லி தழை- சிறிதளவு
- மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
- மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
- சீரகத் தூள்- ஒரு தேக்கரண்டி
- கரம் மசாலா- 1/2 தேக்கரண்டி
- எலுமிச்சை பழம்- 1
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் வடித்த சாதத்தை எடுத்து கொள்ளவும். பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி சாதம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி இஞ்சி, ஒரு தேக்கரண்டி பூண்டு, வேக வைத்து துருவிய ஒரு உருளைக்கிழங்கு, துருவிய ஒரு கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இப்போது இவற்றோடு மசாலா பொருட்களை சேர்த்து கொள்ளலாம். ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி சீரகத் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, ஒரு எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மசித்து பிசைந்து விடவும்.
கையில் சிறிதளவு எண்ணெய் தடவி எலுமிச்சை பழ அளவு கலவையை எடுத்து வடை போல தட்டவும். அனைத்து மாவையும் தட்டி வைத்து கொள்ளுங்கள். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும். தட்டி வைத்த கட்லெட்டை போட்டு இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும். இதனை சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.