உங்கள் நாவின் பசியை அடக்க ருசியான பன்னீர் மசாலா!!!
29 September 2020, 10:00 amசப்பாத்தி, பூரி, தோசை, இட்லி ஆகியவற்றிற்கு எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார், சட்னி செய்வதை விட கொஞ்சம் கூட வித்தியாசமான சைடு டிஷ் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இரண்டு சாப்பிடும் இடத்தில் மூன்று சாப்பிட நினைப்பார்கள். எனவே இன்று நாம் பார்க்க இருப்பது பன்னீர் மசாலா. அதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
பன்னீர்- 200 கிராம்
பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 2
இஞ்சி பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி
பிரியாணி இலை- 1
பட்டை- 1
கிராம்பு- 2
ஏலக்காய்- 2
சீரகம்- ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா- ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
மல்லி தூள்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 3 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை- ஒரு கையளவு
செய்முறை:
பன்னீர் மசாலா செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்க்கவும். இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம்.
இதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 2 தேக்கரண்டி மல்லி தூள், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.
கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 7 – 8 நிமிடங்கள் கொதிக்க விடவும். தக்காளி மற்றும் வெங்காயம் பேஸ்ட் போல ஆனதும் இரண்டு தேக்கரண்டி தயிர் மற்றும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து மேலும் 2- 3 நிமிடங்கள் வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து 200 கிராம் பன்னீரையும் சேர்த்து கொள்ளலாம்.
இது 2 – 3 நிமிடங்கள் வெந்த பிறகு ஒரு கையளவு கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடலாம். இந்த பன்னீர் மசாலா இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, புலவ் ஆகியவற்றிற்கு அட்டகாசமாக இருக்கும்.