பருப்பு எதுவும் சேர்க்காமல் ஆளை சுண்டி இழுக்கும் டிபன் சாம்பார் செய்யலாம் வாங்க!!!

30 October 2020, 1:44 pm
Quick Share

பருப்பு போட்டு தான் சாம்பார் வைக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. பருப்பு பயன்படுத்தாமலே ருசியான சாம்பார் செய்யலாம் தெரியுமா…??? ஓட்டலில் செய்யப்படும் சாம்பார் போலவே கம கமவென்று டிபன் சாம்பார் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்- 10

பெரிய வெங்காயம்- 1

தக்காளி- 2

பச்சை மிளகாய்- 3

மஞ்சள் தூள்- ¼ தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

பூண்டு- 2 பல்

வர மிளகாய்- 9

வர மல்லி- 2 தேக்கரண்டி

சீரகம்- 1 ¼ தேக்கரண்டி

வெந்தயம்- ½ தேக்கரண்டி

மிளகு- 8

பெருங்காய பொடி- ¼ தேக்கரண்டி

கடலை மாவு- 2 தேக்கரண்டி

கொத்தமல்லி தழை- சிறிதளவு

எண்ணெய்- 3 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

டிபன் சாம்பார் செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு நறுக்கிய வெங்காயம், இரண்டு தக்காளி, மூன்று பச்சை மிளகாய், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் அல்லது சாம்பார் தூள், இரண்டு பல் பூண்டு, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து இந்த பொருட்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடிக்கொள்ளுங்கள். இரண்டு விசில் வந்த பின் அடுப்பை அணைத்து விடலாம். 

விசில் அடங்கியதும் மத்து வைத்து பொருட்களை மசித்து தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். இப்போது இந்த சாம்பார் வைப்பதற்கு ஒரு பொடி அரைத்து கொள்ளலாம். அதற்கு ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி வர மல்லி, 7 வர மிளகாய், ஒரு தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி வெந்தயம், 8 மிளகு, ஆகியவற்றை வாசனை வரும்வரை டிரை ரோஸ்ட் செய்யுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்து கொள்ளுங்கள். இதனை காற்று உள்ளே செல்லாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். 

அடுத்து ஒரு வாணலியில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி 1/4 தேக்கரண்டி கடுகு, 1/4 தேக்கரண்டி சீரகம், 2 வர மிளகாய், 1/4 தேக்கரண்டி பெருங்காய பொடி, 10 சின்ன வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்க்கவும். 

பிறகு ஃபிரஷாக அரைத்து வைத்த சாம்பார் பொடியில் இருந்து ஒரு தேக்கரண்டி சேர்த்து கொள்ளலாம். சாம்பார் கொதி வருவதற்குள் ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி கடலை மாவை தண்ணீரில் கரைத்து அதனை ஊற்றி கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சரி பார்த்து சாம்பாரை பதினைந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும். 

Views: - 28

0

0

1 thought on “பருப்பு எதுவும் சேர்க்காமல் ஆளை சுண்டி இழுக்கும் டிபன் சாம்பார் செய்யலாம் வாங்க!!!

Comments are closed.