வீடே கம கமன்னு மணக்க செய்யும் காரசாரமான பெப்பர் மட்டன் வறுவல்!!!
4 February 2021, 7:11 pmதற்போது பறவைக் காய்ச்சல் காரணமாக பலருக்கும் சிக்கன் சாப்பிட பயமாக இருக்கிறது. இதனால் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு மட்டன் பக்கம் முழுவதுமாக திரும்பி உள்ளனர். ஆகவே நீங்கள் கண்டிப்பாக புதிது புதிதாக மட்டன் ரெசிபிகளை தேடிக் கொண்டு இருக்கலாம். உங்களுக்கு உதவ இன்று நாம் ஒரு காரசாரமான பெப்பர் மட்டன் வறுவல் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – 1/4 கப்
பட்டை – 1
சோம்பு – 1 தேக்கரண்டி
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
பிரியாணி இலை – 1
நறுக்கிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 4
நறுக்கிய தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித் தூள் – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகப் பொடி – 2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மட்டன் – 1 கிலோ
உப்பு – சுவைக்கேற்ப
மிளகு – 1 தேக்கரண்டி
சோம்பு – 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 15
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை:
*பெப்பர் மட்டன் வறுவல் செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்.
*எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து வதக்கவும்.
*அடுத்து வெங்காயம் சேர்த்து அது பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
*வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
*கூடவே மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.
*இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனதும் சுத்தம் செய்த மட்டனை சேர்த்து விடலாம்.
*இதற்கு தேவையான அளவு உப்பு போட்டு பத்து நிமிடங்கள் சமைக்கவும்.
*இப்போது பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்குங்கள்.
*தக்காளி பாதி வதங்கியதும் கரம் மசாலா, சீரகத் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.
*இந்த பொருட்களை ஒரு குக்கருக்கு மாற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும்.
*பிரஷர் அடங்கியதும் மூடியை திறந்து சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.
*இதற்கு இடையில் ஒரு வாணலியில் சோம்பு மற்றும் மிளகு சேர்த்து வறுத்து பொடியாக்கி வைக்கவும்.
*சின்ன வெங்காயம் வெந்த பின் மிளகு மற்றும் சோம்பு பொடியை சேர்த்து கிளறவும்.
*அவ்வளவு தான்… கம கம காரசாரமான பெப்பர் மட்டன் வறுவல் தயார்.
0
0