டின்னருக்கு சப்பாத்தி போட்டா ஒரு முறை இந்த கேரளா ஸ்டைல் கடலை கறி செய்து பாருங்கள்!!!

30 November 2020, 10:32 am
Quick Share

கேரள உணவு என்றாலே அது தனித்துவமான சுவையை கொண்டதாக இருக்கும். சமையல் செய்ய கேரளர்கள் தேங்காய் எண்ணெயை தான் பயன்படுத்துவார்கள். சமையலில் தனி சுவை வருவதற்கான காரணமே அது தான். இன்று நாம் பார்க்க இருப்பது கேரளா ஸ்பெஷல் கடலை கறி. 

தேவையான பொருட்கள்:

கொண்டை கடலை- 1கப்

பெரிய வெங்காயம்- 2

தக்காளி- 1

சின்ன வெங்காயம்- 11

பச்சை மிளகாய்- 2

காய்ந்த மிளகாய்- 2

தேங்காய் துருவல்- 1/2 கப்

தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

மல்லி தூள்- 1/2 தேக்கரண்டி

கடுகு- 1/2 தேக்கரண்டி

பட்டை- 2

கிராம்பு- 2

மிளகு- 1/2 தேக்கரண்டி

சோம்பு- 1

கறிவேப்பிலை- 2 கொத்து

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

கடலை கறி செய்வதற்கு ஒரு குக்கரில் எட்டு மணி நேரம் ஊற வைத்த ஒரு கப் கருப்பு கொண்டை கடலையை போட்டு மூன்று கப் வரை தண்ணீர் ஊற்றவும். தேவையான அளவு உப்பு போட்டு குக்கரை மூடி எட்டு விசில் வர விடவும். விசில் வந்த பின் கடலையை எடுத்து தனியாக வைக்கவும். 

இந்த கேரளா ஸ்டைல் கடலை கறியை செய்ய நாம் இன்று தேங்காய் எண்ணெயை தான் பயன்படுத்தப் போகிறோம். அப்போது தான் ஒரிஜினல் கேரளா சமையல் போல் இருக்கும். ஒரு வாணலியில்  இரண்டு தேக்கரண்டி  தேங்காய் எண்ணெய் ஊற்றி இரண்டு பச்சை மிளகாய், இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும். 

பின்னர் நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் ஒரு நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு , 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் நாம் வேக வைத்த கொண்டை கடலையையும் போட்டு வதக்கி மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் வரை அப்படியே இருக்கட்டும்.

இப்போது நாம் மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு கடாயில் ஒரு  தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி இரண்டு பட்டை, இரண்டு கிராம்பு, 1/2 தேக்கரண்டி மிளகு, ஒரு தேக்கரண்டி சோம்பு, 6 சின்ன வெங்காயம், 1/2 கப் தேங்காய் துருவல் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு ஒரு தேக்கரண்டி  மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மல்லி தூள் போட்டு ஒரு நிமிடம் மட்டும் வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது இந்த மசாலாவை கொண்டை கடலையோடு சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.

கடைசியாக கடலை கறியை நாம் தாளித்து விடலாம். அதற்கு தாளிப்பு கரண்டியில்  ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி 1/2 தேக்கரண்டி கடுகு போட்டு, கடுகு பொரிந்தவுடன் இரண்டு காய்ந்த மிளகாய், இரண்டு கொத்து கறிவேப்பிலை, ஐந்து நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து கொண்டை கடலையோடு சேர்த்து கொள்ளவும். அவ்வளவு தாங்க. சுவையான கேரளா ஸ்டைல் கடலை கறி தயார். இது ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு அருமையான காம்பினேஷன். 

Views: - 0

0

0