மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ரிலாக்ஸாக சில டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
6 June 2023, 6:40 pm
Quick Share

அதிவேகமான இதயத்துடிப்பு, அதிகப்படியான பதட்டம், எச்சரிக்கை உணர்வு, அட்ரினலின் அதிகம் சுரத்தல், சோர்வு, எளிதில் கோபமடைதல், தசைகளில் ஏற்படும் இறுக்கம் மற்றும் தலைவலி போன்றவை மன அழுத்தத்திற்கான சில அறிகுறிகள் ஆகும்.

இந்த மன அழுத்தமானது தூக்கமின்மையில் தொடங்கி, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், செரிமான கோளாறு, நரம்புத்தளர்ச்சி, சுவாசம் தொடர்பான நோய்கள் மற்றும் இதய நோய்கள் வரை உண்டாக்குகிறது. தொடர் மன அழுத்தத்தால் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டெரோன் மற்றும் விந்தணுக்கள் உற்பத்தியாவது பாதிக்கப்பட்டு இனப்பெருக்கம் பாதிக்கப்படும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இவை உடல்ரீதியான பிரச்சனைகள் என்றால் மனரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ளவும் தூண்டுகின்றன. எனவே, அவ்வப்போது, இந்தப் பிரச்னையை அடையாளம் கண்டு அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும். இவ்வாறான மன அழுத்தத்திலிருந்து விடுபட ஒரு சில எளிய வழிகளை காண்போம்.

உடற்பயிற்சி:
தினமும் காலை மற்றும் மாலையில் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் நமது மூளையில் எண்டோர்பின்கள் எனப்படும் ஹார்மோன்களை சுரக்கிறது. இது நமது மனச்சோர்வினை குறைக்கிறது. இதனால் நமது உடல் மற்றும் மனம் இரண்டும் வலுவடைகிறது.

போதைப்பொருள் பயன்படுத்துவதை தவிர்த்தல்:
போதைப்பொருள் பயன்படுத்துவதால் தன் நிலை மறந்து தேவையற்ற சிந்தனைகள் ஏற்பட்டு மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு அதிகரிக்கிறது. எனவே மது, புகையிலை போன்ற போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

யோகா பயிற்சிகள்:
தினமும் யோகா பயிற்சி செய்வதால் நமது உடலில் உள்ள தானியங்கி நரம்பு மண்டலம் சீராக இயங்குகிறது. எனவே அழுத்தம் ஏற்படும்போது, நமது உடலும் மனமும் அதை நன்றாக எதிர்கொள்கின்றன. யோகப் பயிற்சிகள் தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. பெரும்பாலும் தூக்கமின்மை காரணமாகவே மன அழுத்தம் அதிகரிக்கிறது. நல்ல உறக்கம் ரத்த அழுத்தத்தைச் சீர்செய்கிறது.
பதட்டத்தைக் குறைத்து ஓய்வு நிலையை ஏற்படுத்துகிறது. சுவாசத்தைச் சீர் செய்கிறது.

உணவு முறை:
மெக்னீசியம், நல்ல கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை உட்கொள்ளும் போது மன அழுத்தத்தை குறைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுவாசப் பயிற்சிகள்:
தினமும் அதிகாலையில் அமைதியான காற்றோட்டமான இடத்தில் குறைந்தது 15 நிமிடம் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது நிச்சயம் மன அழுத்தத்தை குறைக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 300

0

0